"இவன் ராவா ராவா தூங்கிறான். சோதினை கிட்டியிட்டுது. இப்படித் தூங்கினால் எப்படிப் பாஸ் பண்ணப் போறானோ தெரியவில்லை" சலித்துக் கொண்டார்.
சொன்ன தாயாரின் முகத்தை விட்டுவிலகி அவனைப் பார்த்தேன்.
அவன் கண்களில் தூக்கக் கள்ளன் ஒளிய முனைந்தும் மறைய முடியாது என்னிடம் வசமாக மாட்டுப்பட்டான்.
"இப்படிப் படித்தால் பாஸ் பண்ணுவது கஸ்டம்தான்"
கேட்டதும் அம்மாவின் முகம் டியூப் லைட்டாகப் பிரகாசித்தது.
ஏற்கனவே சோர்ந்து கிடந்த அவனது கண்கள் எனது பதிலைக் கேட்டதும் மேலும் அசதியுற்றுத் தாழ்ந்தன. இவ்வளவு படித்தும் டொக்டர் தன்னை அவநம்பிக்கைப்படுத்துவதாக எண்ணுகிறான் என்பது புரிந்தது.
"நித்திரை முழித்துப் படித்தால், படித்தது மூளையில் பதியாது, மறந்து விடும். போதுமான நித்திரை கொண்டால்தால் படித்தவை மூளையில் ஒழங்காகப் பதிவாகி ஞாபகத்தில் நின்று பரீட்சை நேரத்தில் கைகொடுக்கும். இல்லையேல் கேள்விப் பேப்பரைப் பார்த்ததும் அலங்கமலங்க விழிக்க வேண்டிய நிலைதான் வரும்."
இலைமறை காயாகச் சொன்னது புரிந்ததும், மகன் முகம் மலர, அம்மா முகம் அழுகிய மாம்பழமாகச் சூம்பிப் போனது.
அவன் தூங்குவது போதாது என்பது தீர விசாரித்தபோது தெரியவந்ததால்தான் அவ்வாறு சொன்னேன். இரவு 11.30 அல்லது 12 மணி மட்டும் விழித்திருப்பானாம்.
பாடம் படிக்கிறானே இல்லை, பாடப் புத்தகத்துள் கதைப் புத்தகத்தை மறைத்து வைத்து படிக்கிறானா என்பது தெரியாது பல அம்மாக்கள் காவல் பூனையாக காத்திருந்தும் ஏமாறுவது தெரிந்ததுதானே.
காலையில் 5 மணிக்கு அலாரமாக அம்மாவின் அதட்டல் இவனை விழித்து எழ வைக்கும். பகலில் பள்ளிக் கூடம், ரியூசன் என ஓடித்திரியவே நேரம்போதாது. குட்டித் தூக்கம் போடவும் முடிவதில்லை.
ஓட்டப் போட்டி நடக்கிறது பிள்ளைகளுக்கு பரீட்சையில். தங்கள் பிள்ளைகள் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் பிள்ளைகளை படி படி என நிர்பந்தம் கொடுக்கிறார்கள். நல்ல சாப்பாடு கொடுத்தால் உசாராகப் படிப்பான் என்ற நம்பிக்கையால் அதில் குறை வைக்கமாட்டார்கள்.
ஆனால் அவர்களது உள உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதிய தூக்கம் மிகவும் அவசியம் என்பதை மறந்து விடுகிறார்கள்.
பொதுவான ஆரோக்கியத்தைப் பேண மட்டுமின்றி கற்றல் செயற்பாட்டிற்கும் தூக்கம் தேவை என்பது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
மிச்சிகம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மருத்துவர்களின் அண்மைய ஆய்வு இதனை உறுதிப்படுத்துகிறது. 250 பேரைக் கொண்ட ஆய்வின் முடிவு இது.
தூக்கத்தின் போதுதான் ஒருவரது மூளையானது தனக்குக் கிடைத்த தகவல்களை அவர் அறியாமலே பாகுபடுத்தி சேமித்து வைக்கிறது. இந்த ஆற்றல்தான் விழித்திருக்கும்போது அவற்றை ஞாபகப்படுத்துவதற்கு உதவுகிறது.
போதிய நித்திரை கொண்ட பலருக்கு
- ஞாபக சக்தி அதிகரித்திருந்தது.
- சிலருக்கு மாற்றம் ஏற்படவில்லை என்ற போதும்
- பெரும்பாலானவர்களுக்கு சற்றேனும் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது அந்த ஆய்வின்போது தெரியவந்தது.
கற்றல் செயற்பாடு என்பது பாடங்களைப் படித்தல் மட்டுமல்ல. கற்றல் தூக்கத்திலும் நடக்கிறது. இதனைப் புரிந்து செயற்படுத்தினால் மட்டுமே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விப் பெறுபேறுகளில் முன்னேற்றத்தைக் காண முடியும்.
இரவிரவாகப் படித்தும் சோதனையில் கோட்டை விடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
பிள்ளைகளின் பரீட்சை முடிவுகள் வந்த பின்னர்தான் பிள்ளைகளது தூங்கும் நேரம் போதாது என்பதை பெற்றோர்கள் பாடமாகக் கற்க நேர்ந்தால்; அவமாகிவிடும்.
காலம் பொன்னானது.
வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.



3 comments:
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
ரொம்ப நன்றி டாக்டர். என் மகளிடம் தூங்க சொல்லி அலுத்துவிட்டது. இரவு அதிகம் விழித்து படிப்பது போதாது என்று facebook, chat -இல் நிறைய நேர விரயம் செய்கிறாள். இதை படித்து காட்டுகிறேன்.
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி Dr.!
நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
Post a Comment
என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க