Friday, October 28, 2011

காணாமல் போன வேட்பாளர்


"இந்தப் பிள்ளைக்கு சரியான வயிற்று வலி" சிங்களத்தில் சொன்னார்.

நான்கே வயதான குட்டிப் பையனை இரு கைகளாலும் கிடையாகத் தூக்கி கொண்டு வந்தார். ஓட்டமா நடையா என்று சொல்ல முடியாத வேகத்தில் அந்தரப்பட்டு கொண்டு வந்திருந்தார்.


குழந்தை படுக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வேதனையில் முனங்கியபடி திணறிக் கொண்டிருந்தது.

"ஒண்டுமே சாப்பிடுதும் இல்லை. குடிக்கிதும் இல்லை." என்றாள் தொடர்ந்து வந்த பெண்.

பின்னால் ஒரு பெரிய கூட்டம்.

எனது கொன்சல்டேசன் அறைக்கு அப்பால், நடைபாதை, வரவேற்பறை எல்லாம் நிறைந்ததால், வாசலில் தெருவோரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

தேசத்தின் தென்கோடியிலிருந்து சுற்றுலா வந்திருந்தார்கள். பஸ் நிறையச் சனம். நேற்று இரவு புறப்பட்ட பயணம். இரவிரவாகப் பயணித்து கொழும்பு வந்திருந்தார்கள்.

அதனால்தான் பட்டியிலிருந்து திறந்துவிட்ட மாடுகள் போல, சாலை விதிகளை மதிக்காது சிதறிக் கிடந்தார்கள்.

மிருகக் காட்சிசாலை, நூதனசாலை எனக் காலையில் சுற்றியடிக்கும்போது குழந்தைக்கு வலி தொடங்கிவிட்டது. என்னிடம் வரும்போது மதியம் தாண்டிவிட்டது. குழந்தை வலியால் மயங்காத குறை.

"படுக்கையில் கிடந்துங்கோ. சோதித்துப் பாப்பம்"

தகப்பன் கிடத்த முயன்றபோது சிவபெருமான் கழுத்தில் பாம்பாக குழந்தை கைகளால் சுற்றிக் கொண்டது.


தூக்குக் கயிறாகி தகப்பனை கைலாசத்திற்கு அனுப்பிவிடும் என்ற பயத்தில் பரிசோதிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

"குழந்தை என்ன சாப்பிட்டது"

"காலையிலை பணிஸ் சாப்பிட்டு பாலும் குடிச்சது. பிறகு சோடாவும் குடிச்சது. இப்ப இரண்டு மணித்தியாலமாகத்தான் இந்தக் குத்து."

வந்த இடத்திலை கண்ட சாப்பாட்டையும் பிள்ளைக்குச் சாப்பிடக் கொடுத்திருக்குங்கள். செமியாமல் இருக்கும். அல்லது உணவு நஞ்சானதால் ஏற்பட்டிருக்கும்.

"சத்தியும் இருக்கோ?" எனக் கேட்டேன்.

"இல்லை" எனப் பதில் வந்தது.

காய்ச்சல் இருக்கோ எனத் தொட்டுப்பார்க்க முயன்றேன்.

தொற்றாட் சுருங்கிபோல என்னைக் கண்டதும் சோர்ந்தது குழந்தை.

எனது கையில் தனக்கெதிரான ஆயுதங்கள் எதுவும் இல்லை என அறிந்ததும் நிம்மதியடைந்தது. ஊசி, காய்ச்சல் கம்பி, ஸ்டெதஸ்கோப் எதுவும் என் கையில் இருக்கவில்லை!!.


தொட்டபோது உடல் வியர்திருந்ததே ஒழிய காய்ச்சல், குளிர் எதுவும் இல்லை.

கடுமையான வலியாக இருப்பதாலும், குழந்தை படுக்க முடியாமல் குறண்டியபடி தகப்பன் கைகளில் சுருண்டு கிடப்பதால் குடல் கொழுவல், அப்பன்டிசைடிஸ், பெரிடனைடிஸ் என ஏதாவது ஏடாகூடமான நோயாக இருக்கலாம்.

தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்து.

நோயைப் பற்றி அல்ல! எவ்வாறு குழந்தையை படுக்கையில் விட்டுப் பரிசோதிப்பது என்பதையிட்டு.

அப்பொழுது சுவீப் எனக்கு விழுந்தது.

பிள்ளையைதை் தொடாமலே நோயை ஊகிக்க முடிவதைவிட வேறென்ன சுவீப் எனக்குக் கிடைக்க முடியும்?

குழந்தை சற்று அமைதியாகி தனது தகப்பனின் கைகளில் சற்று உடலை நிமிர்த்திப் படுத்தது. குறண்டிக் கிடந்த உடல் நிமிர அதன் வயிற்று பகுதி தெளிவாகத் தெரிந்தது.

"பிள்ளையை பாத்ரூமிற்கு கொண்டு போய் காலை நன்கு குளிரக் கழுவிட்டு மூத்திரம் கழிக்க விடுங்கோ"

ஆச்சரியம் தகப்பன் முகத்தில் படர்ந்தது.

குழந்தை பரிசோதிக்காமல், வேதனையைத் தணிக்க மருந்தும் தராமல் பாத்ரூமிற்குக் கலைக்கிறாரே என்றதில் சிறிது கோபமும் ஏற்பட்டிருக்கலாம்.

 மறுக்க முடியாமல், வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார்.

திரும்பி வந்தபோது குழந்தையின் முகத்தில் வேதனையின் சுவட்டையே காண முடியவில்லை. கட்டிலில் கிடத்தியபோது மறுப்பின்றி நீட்டி நிமிர்ந்து படுத்து, ஆயாசம் அடங்க கண்ணை மூடியது.

வயிற்றைப் பார்த்தேன்.

அடிவயிற்றில் முட்டிபோல வீங்கியிருந்ததை இப்பொழுது காணவில்லை.

வேறொன்றும் இல்லை. இரவிரவாகப் பயணம், பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பொழுதுபோக்கு. முதல் நாள் இரவிலிருந்து சிறுநீர் கழியாததால், அடைத்து வயிறு வீங்கி வலி எடுத்திருந்தது.

காலைக் கழுவி உடலைச் குளிர வைத்ததும் அடைத்த பைப் திறந்துவிட்டது.

திறந்து மூத்திரம் வெளியேற்றியதும் வலி குணமாகிவிட்டது.

அடுத்த முறை இரவு பஸ்சில் யாழ்ப்பாணம் போகும்போது எனக்கு வயிற்றுக் குத்து வந்தால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.


பாவி பஸ்காரர்!

வெள்ளவத்தையில் வெளிக்கிட்டு 'நொன் ஸ்டொப் டிரைவிங்' செய்தால் வயது போன ஆம்பிளையள், அதுவும் புரஸ்ரேட் வீக்கக்காரர் பாடு அதோகதிதான்.


கணவன் கழிப்பதற்கு மனிசிமாரால் தூக்கிக் கொண்டு போக முடியுமா? 

எலக்சன் காலத்திலை அரசாங்கக் கட்சி வேட்பாளருக்குத் தெரிந்திருந்தால், வீதி எங்கும் பாத்ரூம் கட்டுவதாக வாக்களித்திருப்பார்கள்.

பிறகென்ன?

தோற்றவுடன் காணாமல் போயிருப்பார்.

ஞாயிறு வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0.0

Post Comment

8 comments:

bandhu said...

மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன் உள்ள என் மகளுக்கு உங்கள் பதிவுகளை தவறாமல் பகிர்ந்து கொள்கிறேன். எப்படி ஒரு நல்ல மருத்துவர் இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

அம்பலத்தார் said...

ஓகோ! வைத்தியத்திலை இப்படியெல்லாம் விசயங்கள் இருக்கிறதா? சுவாரசியமான பதிவு.

த. அஜந்தகுமார் said...

அருமையான பதிவு..ரசித்துப் படித்தேன்..உங்கள் அனுபவம் குழைந்த மருத்துவம் செறிந்த எழுத்து ஒரு எள்ளலும் எளிமையும் பொருந்தியபடி எப்போதும் தொடரட்டும்

Muruganandan M.K. said...

நன்றி bandhu . உங்கள் மகள் எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

@ அம்பலத்தார். எந்தத் தொழிலையும் ரசனையோடு செய்தால் அதில் சுவாரிசமான சங்கதிகள் இருக்பும்தானே. அதனை மற்றவர்களுடன் பகிர்வதில் நான் மகிழ்கிறேன்.

NamasivayamThillai Arul said...

//வெள்ளவத்தையில் வெளிக்கிட்டு 'நொன் ஸ்டொப் டிரைவிங்' செய்தால் வயது போன ஆம்பிளையள், அதுவும் புரஸ்ரேட் வீக்கக்காரர் பாடு அதோகதிதான்.//

அப்படியே .... கண்ணுக்குள் நடக்கும் விஷயம் போல்....
அவ்வளவு அழகாக சிறுநீர் அடக்கி வைத்தால்
எவ்வளவு பிரட்சனை என்று சொன்னிர்கள்....

வெகு தொலைவு பயணம்...
நாமாவது ஓரமாக போய் விடுவோம்....
பெண்பிள்ளைகள் பாவம். என்ன செய்வார்கள்? ..
இனி பயணம் ரயில் வண்டியில் தான்.....

உங்கள் மருத்துவ திறமை மாதிரி
உங்கள் எழுத்து திறமையும் அருமை....
இரண்டு திறமையும் ஒரு வருக்கு அமைவது பெரும் பாக்கியம்....
எல்லோருக்கும் இப்படி அமையாது....
இறைவன் உங்களிடம் கேட்பது....
"தெரிஞ்சதை எல்லாம் எழுது."...
நானும் தங்களை அப்படியே வேண்டுகிறேன்....

(தங்களுக்கு தமிழ் மருத்துவம் மேல் அப்படி என்ன கோபம்...? )

Muruganandan M.K. said...

மிக்க நன்றி. NamasivayamThillai Arul
பெண்களுக்கு சிறுநீரை அடக்கி வைக்கும் ஆற்றல் அதிகம் அதனால்தான் புரஸ்ரேட் ஆண்கள் பற்றிக் குறிப்பிட்டேன்.

தமிழ் மருத்துவத்தில் எந்தக் கோபமும் கிடையாது. மதிப்பு வைத்திருக்கிறேன். கீழ் கண்ட கட்டுரையைப் படிக்கவும்

http://www.geotamil.com/pathivukal/dr_mkm_on_tamil_maruththuvam.htm

ஆனால் ஆய்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாத சிகிச்சை முறைகளை நான் மற்றர்களுக்கு செய்வது பொறுப்புள்ள மருத்துவன் என்பதால் செய்வதில்லை.

Sankar Kumar said...

அருமையான கட்டுரை. என்ன செய்வது நாகரிகம், அறிவியல், அவசரம் எல்லாம் மனித சமுதாயத்தை சீர் செய்கிறதோ இல்லையோ...! சில கேடுகளை செய்கிறது.
மனித குலத்துக்கு அடிப்படை தேவையான உணவு, உறக்கம், உடல் உறவு இவை எல்லாம் கூட அசிங்கம், நாகரிகமற்றது என்றெல்லாம் சொல்லும் நபர்களும் இருக்கின்றனர். இயற்றை அழைப்புகளை கூட அடக்கி வைத்து விடுகிறோம். பயணம் வேகமாக இருக்க வேண்டியதுதான், அதற்காக உடல் உறுப்புக்களை காலி செய்து விடக்கூடாது.
மருத்துவரான உங்களது எழுத்தாற்றல் வெகு சிறப்பு.

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க