Wednesday, May 18, 2011

குடிகாரக் கணவனின் முரட்டுக் கோபத்தை அடக்கும் வழி



ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.


இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அதற்குக் கிழே கண் மடலும் மொழுமொழுவென நீர்க்கட்டி போல அதைத்திருந்தது.

இவற்றை எமது மனத்தில் அகற்றிவிட்டுப் பார்த்தால் வழமையான அழகான முகமாக பிரகாசிக்கும் எனத் தோன்றியது.

பார்க்கப் பரிதாபமாக தோற்றமளித்தாள். ரத்தக்களரியாகச் சிவந்திருந்த முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அதையும் மீறிய வன்மம் அவளது கண்களில் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கண்களைக் கீழே இறக்கிப் பார்த்தபோது கழுத்தில் கருமையாகக் கண்டல். கைகளில் அங்காங்கே சிறு கீறல்கள்.

“என்ன நடந்தது?”

உடன் பதில் வரவில்லை. வாய் திறப்பதற்கு முன் எதைச் சொல்வது எப்படிச் சொல்வது எனக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். தானகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

வழமையில் அவள் அப்படியானவள் அல்ல. மிகவும் துடிப்பானவள். கேட்பதற்கு முன் பட்பட்டெனப் பதில் வரும். எதிர்க் கேள்விகளும், சந்தேகங்களும் சரமாரியாகப் பாய்ந்து வந்து என்னைத் திணறடிக்கும்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். காதல் கலியாணம். அவனும் நல்ல வேலையில் இருக்கிறான். பண்பாகப் பழகுபவன். இன்னும் குழந்தைகள் இல்லை. இன்று தனியே வந்திருக்கிறாள்.

மனதில் அவளது சரித்திரப் பக்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

“எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…” ஆரம்பித்தவள் சற்று நிதானித்தாள்.

“இதெல்லாம் இவராலைதான். குடிச்சுப் போட்டு வந்தார் என்றால் என்ன செய்யிறம் என்று அவருக்குப் புரியுதில்லை. அடிச்சு உதைச்சு என்னைச் சம்பலாக்கிப் போடுகிறார்”

எனக்கு ஆச்சரியாக இருந்தது. குடிப்பானா அவன்?

“குடிக்கிறவரே. அடிக்கடி குடிக்கிறவரோ. கூடுதலாகவும் குடிக்கிறவரோ” என விசார்த்தேன்.

“அதிகம் குடிக்கிறதில்லை. எப்பெண்டாலும்தான். பார்ட்டி, பிரண்ட்ஸ் என்று சேர்ந்தால் குடிப்பார்…”

“…ஆனால் குடிச்சிட்டு வந்தால் பிரச்சனைதான். கண் மண் தெரியாது, கோபம் பொத்துக் கொண்டு வரும். தேவையில்லாமல் என்னோடை சண்டை போடுவார்.”


காயங்களுக்கு பண்டேச் பண்ணி, உடல் வலிகள் தீர மருந்துகள் கொடுத்தேன்.

ஆனாலும் அவளது அடிப்படைப் பிரச்சனை தீரவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தீராவிட்டால் மீண்டும் அடிகாயங்களுடன் வந்து நிற்பது நிச்சயம்.
பேச்சை ஆரம்பித்தேன்.

“ அவரது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதா?”

“அடிக்கடி குடிக்கிறவரில்லை…

“..எப்பெண்டாலும்தான் குடிப்பார். அந்த நேரத்திலை அவர் அடியாமலிருக்க ஏதாவது செய்ய முடியுமா டொக்டர்”

சற்று சிக்கலான விடயமாக இருந்தது. மருத்துவ ரீதியில் குடித்துவிட்டு வருபரை உணர்ச்சி வயப்படாமல் தடுக்க முடியமா?

அதனால் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சற்று யோசித்தேன்.

“நீங்கள் ஒரு முயற்சி செய்து பாருங்கள். அவர் குடித்துவிட்டு வரும் நேரங்களில் உங்களது வாயில் கிறீன் ரீயை விட்டு அலசிக் கொண்டே இருங்கள்...

...குடிக்கக் கூடாது,

....வெளியே துப்பவும் கூடாது.

...வாயில் வைத்து அலசிக் கொண்டே இருங்கள்.”


அவளுக்கு ஆச்சரியாக இருந்தது.

கிறீன் ரீயை குடியாமல் அலசிக் கொண்டே இருப்பதா. அதுவும் அடிக்கும் அவரல்ல! அடி வாங்கும் தான்!

அரை நம்பிக்கையோடு சென்றாள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தாள். அடி, காயம் எதுவும் இல்லை. தடிமன் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வந்திருந்தாள்.

“இப்ப அவர் குடித்தால் அடிக்கிறதில்லையோ”

“இல்லை…..” முழுமதியாக முகம் பூரித்தாள்.

“…என்ன அற்புதமான ஐடியா சொன்னீர்கள். அவர் குடிச்சிட்டு வந்தால் நான் நீங்கள் சொன்னபடி வாயில் கிறீன் ரீயை என்ரை வாயில் விட்டு அலசிக் கொண்டே இருப்பேன். அவர் அடிப்பதேயில்லை…
.
…என்ன அதிசயம். எப்படி நடக்குது டொக்டர்? அந்த கிறீன் ரீ மணத்திற்கு கோபம் வராமல் தடுக்கிற குணம் இருக்கிதா?”

நான் மறுமொழி சொல்லவில்லை. உண்மையைச் எப்படி முகத்துக்கு நேரே சொல்வது?

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.


‘நீ வாயை மூடிக்காண்டிருந்தால் அவரது கை நீளாது’ என்பதை அவளுக்குக் கூறவில்லை.

வெறுமனே புன்னகைத்தேன்.

எனது வேறுசில ஆலோசனைகள் பற்றி அறியக் கீழே கிளிக் பண்ணுங்கள்.



டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0


Post Comment

10 comments:

விசரன் said...

ஆகா... உங்கள இனி Tea டாக்டர் என்று தான் அழைக்கப்போகிறார்கள். இந்த டீ கொப்புளிக்கிற வேலய ஆண்களும் செய்யலாமோ டொக்டர்..?

இதுவும் இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.. இல்லையா டாக்டர்.

J.P Josephine Baba said...

நல்ல ஆலோசனை எல்லோரும் பின் பற்ற தகுந்தது தான்!

அம்பாளடியாள் said...

மிக அழகாக புகைப்படங்களோடு இணைக்கப்பட
தங்கள் தகவல் அருமை!...பகிர்வுக்கு மிக்க
நன்றி ஐயா.....

♔ம.தி.சுதா♔ said...

போதை என்ற கொடிய அரக்கன் எப்போ அழிகிறனோ அன்று தான் மனித இனம் நல்லாயிருக்கும்...

மசாலா மசாலா said...

சென்ற வருசம் தாயகம் வந்திருந்தபோது தென்னிலங்கை சுற்றுலாவிற்கு எமது வாகனச்சாரதியாக நடுத்தரவயது மதிக்கத்தக்க சிங்களவர் வந்திருந்தார். அவருடன் ஒரு நாள் தமிழ் சிங்கள உறவுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது தான் கரகம்பிட்டியவில் இருப்பதாகவும் தனது குடும்பவைத்தியரே வெள்ளவத்தையில் இருக்கும் முருகானந்தன் மாத்தையா எனும் தமிழ் ஆள்தான் அருமையானவர் என்று கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.
இன்னும் ஒருதடவை இங்கு நாம் வாழும் தேசத்திலுள்ள தமிழ்க்குடும்பத்தினருடன் பேசும்போது பேச்சுவாக்கில் நான் பருத்தித்துறை என்று கூறியதும் அங்கை முருகானந்தமென்று அருமையான டொக்டர் இருந்தவரல்லோ ந்ங்கள் இடம்பெயர்ந்து வடமராட்சியிலை வந்திருந்தகாலத்திலை ஒரு சின்னவருத்தமென்றாலும் அவரிடம்தான் ஓடுறது அவர் தாறமருந்தை கொண்டுவந்தால்காணும் வருத்தம் தானாக மாறிவிடும் அப்படியொரு கைராசிக்காரர் என்று சொல்லினவை.
சென்றவாரம் ஒரு கல்யாணத்திற்காக சுவிஸ் சென்றிருந்தன் விடியவிடிய மண்டப ஒழுங்குகளைப் பலரும் சேர்ந்து செய்துகொண்டிருந்தம் இப்படியான சந்தர்ப்பங்களிலை பலதையும்பற்றிப் பேசுவது வழமைதானே ஊர்பற்றிய பேச்சு வந்தது நான் பருத்தித்துறை என்றதும் பக்கத்திலை நின்றவர் நீங்கள் கொடுத்துவைத்தனிங்கள் என்றார் ஏன் என்றதற்கு உங்கட ஊரிலைதானே முருகானந்தம் டொக்டர் இருந்தவர் என்றபதில் வந்தது.
இப்பொழுதுதான் புரியுது எங்கெங்கோ இருப்பவர்களையெல்லாம் வசியம்பண்ணும்விதமாக எப்படி எப்படியெல்லாம் சேவை செய்திருக்கிறியள் என்று
வாழ்த்துக்கள் டொக்டர்.

அம்பலத்தார்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

Tea டாக்டர் என்றால் பரவாயில்லை, டே டாக்டர் என ஏசாமல் தப்பவிட்டால் போதும்
@ விசரன் (சஞ்சயன்)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

கருத்துரைகளுக்கு நன்றி
@ J.P Josephine Baba
@ அம்பாளடியாள்
@ ♔ம.தி.சுதா♔

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி அம்பலத்தார்
பழைய நினைவுகளைப் பகிர்ந்ததற்கு.
ஐஸ் மழையில் நனைந்து எனக்கு தடிமன் பிடித்துவிடும் போலிருக்கிறது.

நிரூபன் said...

வணக்கம் டொக்டர் ஐயா,
எப்படி இருக்கிறீங்க?
இது பின்னூட்டமல்ல. தங்களின் மின் மடலை எடுக்க முடியாத காரணத்தால், நான் எழுதும் சிறிய மடல்.


கொழும்பு பல்கலைக் கழகத்தி ஊடாக உங்களுக்கு சிறந்த வலைப் பதிவருக்கான விருது கிடைக்கப் போகிறது எனும் மகிழ்ச்சியான செய்தியினை அறிந்தேன்.
வாழ்த்துக்கள் ஐயா.
எமது மண்ணின், மக்களின் மனங்களினை வெல்லும் வண்ணம் தொடர்ந்தும் காத்திரமான படைப்புக்களையும், மருத்துவத் தகவல்களையும் நீங்கள் தர வேண்டும் என இத் தருணத்தில் வேண்டுகிறேன்.

நேசமுடன்,
நிரூபன்.

குருதி கொடையாளர். BLOOD DONOR. said...

வணக்கம்
மருத்துவர் எம்.கே.முருகானந்தன் ஐயா அவர்களுக்கு

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.‘நீ வாயை மூடிக்கொண்டிருந்தால் அவரது கை நீளாது’ ...............................,

உங்கள்பதிவு தரமானவை ஆக்கபூர்வமானவை விழிப்பூட்டுபவை அதற்க்கு நன்றிகள்
///குடி போதைக்கு அடிமையானவர்களை எவ்வாறு மற்ற முடியும் என சிறு விளக்கம் தரமுடியுமா உதவியாக இருக்கும் ///இது ஒரு வேண்டுகை மட்டுமே .

தமிழன் புகழ் உலகம் எங்கும் பரவட்டும்
http://www.facebook.com/npblooddonors
நன்றி நட்புடன்

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க