Saturday, March 26, 2011

இல்லாத நோய்க்கு வில்லாத மருந்து


“விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்” ஆத்திரத்தில் அவரது முகம் சிவத்துத் துடித்தது.

கிட்ட இருந்திருந்தால் அந்த டொக்டரின் முகம் பப்படம் போல சுக்கு நூறாகியிருக்கும். அடித்து நொறுக்கியிருப்பார் என்பது நிச்சயம்.

கொழும்பின் மறு எல்லையிலிருந்து வந்திருந்தார் அவர். அந்த டொக்டரும் அங்குதான். நான் மறு எல்லையில்.

நீண்டகாலமாக, பரம்பரை பரம்பரையாக என்னிடம் மருந்து எடுக்கும் குடும்பத்தினர். அவரது குடும்ப வைத்தியார் நான். இப்பொழுது நெடும்தொலைவில் இருக்கிறார். ‘எடுத்ததற்கெல்லாம்’ என்னிடம் ஓடி வருவது முடியாத காரியம். அவசரத்திற்கு பக்கத்தில் உள்ள டொக்டரிடம் காட்டுவார். சற்றுத் தீவிரமான பிரச்சனை என்றால் என்னிடம் வருவார்.

இப்பொழுது வந்தது பெரிய பிரச்சனை அல்ல. நேர நெருக்கடியால் அருகில் மருந்தெடுத்தும் குறையாத பிரச்சனை. சாதாரண சளி இருமல்தான்.

ஆனால் முக்கியமான பல வேலைகள் இருப்பதால் விரைவில் சுகமாக வேண்டும் என்ற அவசரத்தில் என்னைத் தேடி வந்திருந்தார். இப்பொழுதும் வழமையாக அருகில் இருக்கும் டொக்டரிடமே காட்டியிருக்கிறார். அவரும் திறமையான பெயர் பெற்ற மருத்துவர்தான். இவர்; அவசரப்பட்டு என்னிடம் வந்துவிட்டார் என எண்ணிக் கொண்டேன்.

“என்னெண்டாலும் உங்களிட்டை காட்டினால்தான் எனக்கு சுகம் வரும்” என்ற பாராட்டுரை நீரிழிவுக்காரனுக்கு ஐஸ்கிறீம் கிடைத்தது போல இனித்தது.

“என்ன மருந்து தந்தவர்” எனக் கேட்டேன்.

மறுமொழி சொல்லவில்லை!

பட்டென எழுந்தார். எழுந்த வேகம் என்னை அசர வைத்தது.


இவர் கோபப்படும்படி நான் எதுவும் சொல்லவில்லையே, ஏன் இப்படி வீராவேசமாக எழுகிறார்.

அவரது அடுத்த செய்கை என்னைத் திகைக்க வைத்தது.

எழுந்த வேகத்தில் பக்கென ரௌசர் பொக்கற்றில் கையை வைத்து எதையோ சிரமப்பட்டு இழுத்தார். மூச்சடைத்த நான் அவரது கையிலிருந்து வரப்போவதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தேன்.

உள்ளுர ஒரு அச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.

கை நிறைய ஒரு கட்டு என்வலப்புகள் வெளி வந்தன.

நல்லவேளை துப்பாக்கி அல்ல.

அவருக்கு வந்த காதல் கடிதங்களும் அல்ல. மருந்து போட்ட என்வலப்புகள்.
அவ்வளவும் அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள்.

‘ஒரு சாதாரண இருமலுக்கு இவ்வளவு மருந்துகளா’

கேட்பது நாகரீகம் அல்ல என்பதால் வாய் பொத்தியிருந்தேன்.


ஓவ்வொன்றாக எடுத்துப் பார்க்க வேண்டிய துன்பம் எனக்காயிற்று.

தடிமனுக்கு, சளிவெட்ட, அன்ரிபயடிக், விட்டமின்கள் என இன்னும் இன்னும் ….

ஒரு மருந்து மட்டும் வித்தியாசமாக இருந்தது. Fefol விலையுயர்ந்த இரும்புச் சத்து மருந்து. அதுவும் கொஞ்சநஞ்சம் அல்ல. 30 மாத்திரைகள். 

குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள். சாதாரண வார்த்தைகளில் சொன்னால் இரத்தசோகை உள்ளவர்களுக்கு கொடுப்பதாகும்.

இவர் நல்ல ஆரோக்கியமானவர். வயதும் 40-45தைத் தாண்டாது. தனது உடலில் அக்கறையுள்ளவர். கீரை, மீன், பழவகைள், கோழியிறைச்சி எனஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளவர். தினசரி நடைப் பயிற்ச்சி செய்பவர். இவற்றின் மூலம் தனது எடையையும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர். குடி, புகைத்தல் போன்ற பழக்கங்களும் இல்லாதவர். எனவே இரத்தசோகை வருவதற்கு வாய்ப்பில்லை என்பது புரிந்தது.

ஆயினும் மூலத்தால் இரத்தம் போதல், நடந்தால் இளைப்பு போன்ற ஏதாவது குணங்குறிகள் இருக்றிறதா என விசாரித்தேன்.

“அப்படி ஒன்றும் இல்லை” என்று சொன்னவர் சற்று யோசித்தார். “விலையான மருந்து! இதுக்கு மாத்திரம் 300 சொச்சம் அவற்ரை பார்மஸியிலை எடுத்தவை…”

“..இந்த மருந்துக்கு expiary date இன்னும் ஒரு மாதத்திலை வருகிது…” எனச் சொல்லிப் போட்டுத்தான் அந்த அதிர்ச்சி தரும் வார்த்தைகளை ஆவேசமாக உதிர்த்திருந்தார்.
 

 -விலை போகாத இந்த மருந்தை என்ரை தலையிலை கட்டியிருக்கிறார் அந்த டொக்டர்-.

மருத்துவர்களைக் கடவுள்களாகக் கருதிய காலம் உண்டு. “ஐயா கடவுள் முதல், அடுத்தது நீங்கள்” எனப் பலர் கூறியதைக் கேட்ட அனுபவம் எனக்குண்டு.

இத்தகைய சூழலில் ‘விலையாகாத மருந்தைத் தலையில் கட்டுபவர்;’ என்ற சொல்லு என்னைப் பற்றியல்ல வேறு ஒரு டொக்டரைப் பற்றி என்ற போதும் மனத்தை உறுத்தியது.

மருத்துவம் என்பது கூட சேவை என்பதற்கு அப்பால் உழைப்பிற்கான ஒர் வழியென்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

காசேதான் கடவுள் அப்பா என்ற காலம் இது.

இருந்த போதும் எந்த ஒரு டொக்டரும் ஒரு நோயில்லாத ஒருவருக்கு அல்லது வேறு நோயுள்ள ஒருவருக்கு அதற்கு சம்பந்தம் இல்லாத மருந்தை விற்பனை செய்வதற்காகக் கொடுத்தார் என்பது தவறான குற்றச் சாட்டாகவே எனக்குப் பட்டது.

என்ன நடந்திருக்கலாம். பல கோணங்களில் யோசித்துப் பார்த்தேன்.
நோயாளி அன்று ஏதாவது ஒரு களைப்பு இளைப்பு என்று ஏதாவது சொல்லிவிட்டு இப்பொழுது மறந்திருப்பார்.

அல்லது மருத்துவரின் சிட்டையை, சரியாகப் படிக்காத மருந்து கொடுப்பவர் தவறான மருந்தைக் கொடுத்திருக்கலாம்.

ஆயினும் மனம் திருப்திப்படவில்லை எங்கோ எதோ தவறு நடந்திருக்கிறது என மனம் அழுத்திச் சொல்லியது. அவரது மருந்துப் பைக்கற்றை வாங்கி கவனமாகப் பரிசோதித்தேன்.

எல்லாம் சரியாகத்தான் இருப்பதுபோல் இருந்தது. ஆனால்

பக்கற்றில் மருந்து கொடுக்கப்பட்டவரின் பெயர் திருமதி என ஆரம்பித்திருந்தது....

....அந்தப் பைக்கற்றில் மாத்திரம்….

மனைவி கொடுக்கும் சாப்பாட்டை மட்டுமல்ல மனைவிக்கான மருந்தையும் இவரே சாப்பிட்டுவிட்டார்.

மருத்தவர்களின் சிகிச்சை அறைகளில் நடக்கும் சில சிரிப்பான சம்பவங்களுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Post Comment

5 comments:

Vijay said...

எதிர்பார்க்காத திருப்பம் - முடிவில். மிகவும் இரசித்தேன்.
"குருதியில் ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள் " என்பதில் "குறைந்த" (குருதியில் ஹீமோகுளோபின் குறைந்த அளவு உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள்) என்ற சொல் விடுபட்டுவிட்டது போலுள்ளது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

@Vijay
தவறியதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. உடனேயே திருத்தம் செய்து விட்டேன்.

நிரூபன் said...

வணக்கம் சகோ, உங்களின் இந்த இடுகையின் உள் கருத்தினை படித்தேன், சிரித்தேன். எனக்கும் இப்படியொரு சம்பவம் நடந்தது, இருமல், அல்லது அலேர்ஜி இருந்தால் அதற்குரிய சரியாஅன மருந்தினைத் தராது மாற்றி மாற்றித் தந்து எனக்கு ஒரு டாக்டர் வருத்தத்தை அதிகரித்திருந்தார்..

உங்களின் மொழி நடையினை பார்த்து மகிழ்ந்தேன். மருத்துவக் குறிப்புக்களை மக்களிடம் இலகுவான முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் கதை வடிவில் சுவாரசியமாக நகைச்சுவை சேர்த்து எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்!

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஅவருக்கு வந்த காதல் கடிதங்களும் அல்ல. மருந்து போட்ட என்வலப்புகள்.ஃஃஃஃ

ஹ...ஹ... தாங்கள் சொன்ன விதம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.. ஐயா...

தாங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இந்த எழுத்துலகத்துக்கும்.. மருத்துவ உலகத்துக்கும் பற்பல சேவை செய்து சிரும் சிறப்புடனும் வாழ என் வாழ்த்துக்கள் ஐயா...


ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி நிரூபன். தவறுகள் நடப்பது சகஜம்தான். எமது வாழ்வையும் நாமே திரும்பிப் பார்த்துச் சிரிக்கப் பழகிக்கொண்டால் வாழ்வு மகிழ்ச்சியாகும்.

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க