தனது ஆரோக்கியத்தில் வலு கவனம். சின்ன வருத்தம் என்றாலும் உடனடியாக மருந்து எடுக்க வந்துவிடுவார்.
"எந்த வருத்தத்தையும் வச்சுக் கொண்டிருக்கக் கூடாது. ஆரம்பத்திலேயே கிளைஞ்சு போட வேணும்" என்பார்.
தடிமன், காய்ச்சல், தலையிடி, முழங்கால் நோ, உழைவு குத்து இப்படி சில்லறை வருத்தங்கள்தான். டயபிடிஸ், பிரஷர், இருதய நோய் போன்ற ஆரோக்கியக் கேடுகள் எவையும் அவரை அண்டியது கிடையாது. இனி அண்டவும் வாய்ப்பிலை. வயசானதால் விரைவில் இனி அவை வர வாய்ப்பில்லை.
அதற்கிடையில் மறு உலகமடைந்து விடுவார் என்பதாலும் அல்ல. உண்மையிலேயே உடல் உள நலங்கள் நல்ல நிலையில் இருக்கிறது.
மருந்திற்கு வரும்போது இந்த வயதிலும் எவரது துணையுமின்றித் தனியாகவே வருவார்.
பசையுள்ள மனிதன். காரில் வருவார். தான் ஓட்டுவதில்லை. இவருக்கென டிரைவர் இருக்கிறான். ஆனால் என்னைச் சந்திக்க உள்ளே வரும்போது தனியாகவே வருவார்.
வலு பம்பல்க் காரன். பகடிகளுக்கும் குறைவில்லை. இடையிடையே என்னோடு கதைச்சுக் கொண்டிருப்பதில் வலு புளுகம். அதுவே அவருக்கு டொனிக் மாதிரி.ஆனால் ஒரு பிரச்சனை. பேரைக் கேட்டால் வயசைச் சொல்லுவார். வருத்தம் என்ன எண்டு கேட்டால் காலையில் 'காரில் வோக்கிங்' போன கதையைச் சோடிச்சுச் சோடிச்சுச் சொல்லுவார்.
காது மந்தம்.!!
ஆனால் காது கேட்கும் கருவி போடுவதிலும் விருப்பமில்லை.
"உந்தச் செவிட்டு மிஷின் எனக்குத் தோதுப்படாது"
என அடியோடு நிராகரித்துவிடுவார்.
ஒருவாறு கடைசியில் எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். நவீன விலையுயர்ந்த Hearing aidனை ஒன்றை காதுநோய் நிபுணர் ஊடாக பெற்றுக் கொண்டார்.
மிக அதிசயமாக நன்றாகப் பொருந்தியது. தெளிவாகக் கேட்டது. சந்தோசப்பட்டார்.
அடுத்த முறை சந்தித்தபோது எவ்வாறு இருக்கிறது என்று கேட்டேன்.
"நல்லா இருக்கு. முந்தியே போட்டிருக்கலாம். தப்ப விட்டுட்டன்"
சிறிய ஏக்கம் இழையோடினாலும் மகிழ்ச்சி மேலோங்கி நின்றது.
"எப்படி வீட்டை மனிசி பிள்ளையளுக்கு உங்களுக்கு காது கேட்பதில் சந்தோசமோ" எனக் கேட்டேன்
"அவையளுக்கு எப்படியோ ! ஆனால் என்ரை லோயருக்கு நல்ல சந்தோசம்."
"லோயருகுக்கோ ...."
காது கேட்பதற்கும் லோயருக்கும் என்ன சம்பந்தம். குடும்பத்தினரை மீறிய சந்தோசம் லோயருக்கு எப்படி வரும்.
"ஓம்! நாலுதரம் உறுதியை மாத்தி மாத்தி எழுதினால் அவருக்கு நல்ல வரும்படிதானே"
சுருங்கிய தோல்களுக்கிடையே கண்கள் சிமிட்டின.
"எனக்கு காது கேக்கும் என்ற விசயத்தை வீட்டை ஒருவருக்கும் சொல்லயில்லை. ஒண்டும் விளங்காதவன் போலை இருந்த கொண்டு அவையடை கதையளைக் கேட்டுக் கொண்டிருந்தன். .."
...அதாலைதான் உயிலை மாத்தி எழுத வேண்டி வந்தது."
வழமைக்கு மாறாக இன்று ஏக்கப் பெருமூச்சு அவரிலிருந்து பிறந்தது.
பிறந்த வந்த ஏக்கமா?
0.0.0.0.0


5 comments:
:-)
டொக்டர் எனக்குத் தெரிந்த ஒரு பிள்ளைக்கு வயது 11. சமீபத்தில் அம்மைக் காய்ச்சல் வந்தது. அது குணமான பிறகு பார்த்தால் ஒரு காது சம்பூரணமாகக் கேட்பதில்லை. பல வைத்தியர்களிடம் காட்டியும் பலனில்லை. இது வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கிறது. குணப்படுத்த முடியாதென்றே எல்லோரும் சொல்கிறார்கள். நிஜமாகவே குணப்படுத்த முடியாதா? அம்மைக் காய்ச்சலால் எப்படி காது கேட்காமல் போகிறது?
மனிதருக்கு காது கேக்காமலே இருந்திருக்கலாம்...
எனக்கேதோ அவருக்கு காது கேட்டது நல்லதாகவே படுகிறது.தனக்கு நெருக்கமானவர்களின் சுயரூபத்தை கணடு சொண்டிருக்கிறார் தானே.
Nice post! :)
நன்றி சஞ்சயன், ஜீ
Post a Comment
என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க