Thursday, April 1, 2010

அலங்காரப் பொம்மைகள்

 பார்த்து முடித்த நோயாளி வெளியேறுவதற்கிடையில், இடித்துப் பிடித்துக் கொண்டு ஒரு பெண். உள்ளே நுழைந்த அவள், இழுக்காத குறையாக ஒரு முதிர்ந்த அம்மாளை கூட்டி வந்திருந்தாள்.

"இருங்கோ" நான்.

அம்மா கதிரையில் அமர்ந்து முடிவதற்கிடையில்,
"இவவுக்கு ஒரு குளுக்கோஸ் ஏத்த வேணும் டொக்டர்" என்றாள் அந்தப் பெண்.

எனக்குக் கோபம் ஜிவ் வென்று மூக்கு நுனியில் ஏறியது.
நான் இன்னமும் நோயாளியோடு பேசவில்லை.
நோயாளியைப் பரிசோதிக்க வில்லை.
நோயை நிர்ணயிக்கவும் இல்லை.
அதற்கிடையில் என்ன வைத்தியம் செய்வது என்று இவள் எனக்குக் கட்டளையிடுகிறாள் என்ற தொழில் ரீதியான கோபம்.

ஆனால் முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. பதிலும் கூறவில்லை. நோயாளியை நிதானமாகக் கூர்ந்து அவதானித்தேன்.

வயது அறுபது இருக்கும். கறுத்து மெலிந்த தேகம். களைத்துச் சோர்ந்த உடல். சாதாரண நூற் சேலைதான். அதையுங்கூட ஒழுங்காகக் கட்டவேண்டும் என்று அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. தலைமுடியையும் ஏதோ இழுத்துக் அவசர கோலத்தில் முடித்துக் கொண்டது மாதிரி இருந்தது.



முகத்தைப் பார்த்தேன்.
பொட்டில்லை.
குழி விழுந்த கண்களில் ஆழ்ந்த சோகம்.
சுருக்கம் விழுந்த நெற்றி.
தனக்கும் தான் இங்கு வந்ததற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பது போன்ற விடுபட்ட போக்கு.

கூட்டிக்கொண்டு வந்த பெண் ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. அவளை முந்திக்கொண்டு அம்மாவுடன் கதைக்க ஆரம்பித்தேன்.

 பெயர், வயது போன்ற மாமூலான கேள்விகளுக்கு மெல்லிய தொனியில் பதில் சொன்னாள் அம்மா.

"அம்மா உங்களுக்கு என்ன சுகமில்லை?" என மிகுந்த பரிவோடு கேட்டேன்.

"எனக்கு ஒண்டுமில்லை"
நறுக்காக வெட்டியது போல வந்தது பதில்.

"உவ இப்பிடித்தான் சொல்லுவா.
சரியான பெலயீனப்பட்டுப் போய்க் கிடக்கிறா.
ஒழுங்கா சாப்பிடுறதுமில்லை.
சத்தாகக் குடிக்கிறதுமில்லை.
இப்பிடிக் கிடந்தால் இவவை நான் எப்படி வாற கிழமை லண்டனுக்குக் கூட்டிக்கொண்டு போறது?
அதுதான் ஒரு குளுக்கோஸ் ஏத்திவிட்டால், நான் ஒரு மாதிரிச் சமாளிச்சு இவவைக் கூட்டிக்கொண்டு போடுவன்."

உண்மையில் அம்மா பெலவீனப்பட்டுத்தான் கிடந்தாள்.

அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி, கட்டிலில் கிடத்தி, தாதிமார் உதவியுடன் குளுக்கோஸ் செலுத்த ஆரம்பித்தேன்.

மகளின் முகத்தில் திருப்தி.

"நான் ஓருக்கால் கடைக்குப் போக வேணும்.
குளுக்கோஸ் முடியிறத்துக்கிடையில வந்திடுவன்.
அவ்வளவுக்கும் பார்த்துக் கொள்ளுங்கோ"
அவள் வெளியேறினாள்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் அம்மாவுடன் வெளிப்படையாகப் பேசவேண்டும்.
இனி அம்மாவை மனந்திறந்து பேசவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். அவ பேசினால்தானே என்னால் நோயை நிர்ணயிக்க முடியும்.

"ஏனம்மா ஒழுங்காகச் சாப்பிடுறியள் இல்லை? உங்களுக்கு என்ன கஷ்டம்?" ஆதரவாகத் தோள்மூட்டில் தட்டியபடி கேட்டேன்.

"எனக்கு ஒண்டுமே பிடிக்குதில்லை"

"மகள் வந்து நிக்கிறா. உங்களையும் தன்னோடு கூட்டிக் கொண்டு போகப் போகிறா. பிறகென்ன கவலை?"

அம்மாவின் கண்களில் நீர் முத்துக்கள். "எனக்கு லண்டனுக்குப் போக விருப்பமில்லை"

"ஏனம்மா?"

"நான் ஊருக்குப் போகவேணும். மகளிட்ட சொல்லுங்கோ ஐயா"
கண்ணீர் ஓடக்
கையெடுத்துக் கும்பிட முனைந்தாள்.

கையை ஆதரவோடு பற்றிக் கட்டிலில் மீண்டும் வைத்தேன். குளுக்கோஸ் ஏறுகிறது, கையை ஆட்டினால் ஊசி திரும்பிக் குத்தி கை வீங்கிவிடும்.

அம்மா இவ்வளவு காலமும் ஊரிலதான் இருந்தவவாம். கணவன் செத்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை. ஆறு பிள்ளைகள். மூத்த மகள் மனிசனிட்ட கனடாவுக்குப் போறதற்காக ஒரு வருஷமா கொழும்பில நிக்கிறா.

 மிச்சம் ஐந்தும் கண்டத்துக்கு ஒண்டொண்டாய்ப் பரந்து கிடக்குதுகள். நடுத்தியாள் ஐந்து வருடங்களாக லண்டனிலை இருந்தாள்.
அம்மாவைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொழும்புக்கு வர இருந்ததால் அம்மாவையும் கொழும்புக்கு வரச் சொல்லி எழுதினாள்.

(இக் கட்டுரை எழுதிய 1996-2004 களில் யாழ் கொழும்பிற்கு நேரடிப் போக்கு வரத்துக் கிடையாது. இராணுவத்திடம் அனுமதி வாங்கி கப்பலில்தான் வர வேண்டும்.)

அவளை எதிர்பார்த்து அம்மா நாலு மாசமாகக் கொழும்பில மூத்தவளோட தவம் கிடக்கிறாள்.

அவளுக்கு கொழும்பே பிடிக்கவில்லை. லண்டன் வேண்டவே வேண்டாமாம்.

ஊரில எண்டால் எவ்வளவு நிம்மதி. பக்கத்தில மருதடிப் பிள்ளையார் கோயில். ஒவ்வொரு நாளும் காலையில போய்க் கும்பிட்டுட்டு வந்தால் தான் அம்மாவுக்கு நிம்மதியாயிருக்கும்.
காலாற நடக்கலாம்.
கடை தெருவுக்குத் தனியப் போகலாம்.
அக்கம் பக்கத்தில் சகோதரர்களும், இனசனங்களும் இருக்கினை.
மனமாறக் கதைக்கலாம்.
இஞ்சை என்ன கிடக்கு?

"அதோட சொந்த வீட்டில இருக்கிறது போல வருமே. நான் சாகிற தெண்டாலும் சொந்த வீட்டிலதான் சாக வேணும். இதுகள் லண்டனுக்கு வா வா எண்டு அழுங்குப் பிடியாய்ப் பிடிக்குதுகள். எனக்குப் போகக் கொஞ்சமும் விருப்பமில்லை. மகளுக்குக் கொஞ்சம் சொல்லுங்கோ ஐயா" என்றாள்.

மகளுக்கு எப்படி அம்மாவின் நிலையைப் புரிய வைப்பது? நாசூக் காக ஆரம்பித்தேன்.

"உங்கட அம்மாவுக்கு மனம் சோர்ந்துபோய்க் கிடக்கு.
அதாலதான் இப்படி வெறுத்துப் போய்க் கிடக்கிறா.
மருந்துகள் தாறன்.
ஒவ்வொரு நாளும் பொழுதுபட ஆறு மணிபோல ஒன்று கொடுங்கோ. கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிடுவா.
ஒரு கிழமையால திரும்ப கொண்டு வந்து காட்டுங்கோ"என்றேன்.

"அதுக்கிடையில் போடுவம் போல இருக்கு" என்றாள்.

"அங்கைதானே பிரச்சனை. அம்மாவுக்கு வெளிநாடு போறதில கொஞ்சம் கூட விருப்பமில்லைப் போல இருக்கு. அவவைக் கட்டாயம் கூட்டிக் கொண்டுதான் போக வேணுமோ?" என நான் மெதுவாகக் கேட்டேன்.

"என்ன டொக்டர் இப்பிடிச் சொல்லுறியள்!
எல்லாப் பிள்ளையளும் வெளிநாட்டில.
அக்காவோடைதான் இஞ்சை இருந்தவ.
அக்காவுக்கும் பிள்ளையளுக்கும் கனடாவுக்கு விசா கிடைச்சிடுத்து. அவையளும் பத்துப் பதினைஞ்சு நாளைக்குள்ள போயிடுவின.
பிறகு ஆர் இவவைப் பாக்கிறது?"

"அம்மாவுக்கு கொழும்பு வாழ்க்கையும் பிடிக்கவில்லையாம்.
தான் ஊருக்குத்தான் போகவேணும் எண்டு சொல்லுறா.
சில வயதானவை யளுக்கு புதிய சூழ்நிலைகளுக்கு அட்ஜஸ்ட் பண்றது கஷ்டம்தானே.
அவவின்ர விருப்பப்படியே விடுங்கோவன்.
ஊரிர எண்டால் சகோதரம் இனசனம் எல்லாம் இருக்காம்.
தான் சந்தோஷமாக இருப்பாவாம். அதுகளும் இவவை அன்பாப் பாப்பினமாம்"என்றேன்.

அவள் முகம் சிவந்தது.
அவமானப்பட்டது போல வெகுண்டாள்.

"நல்ல கதை கதைக்கிறியள்.
இவவை ஊரில விட்டிட்டுப் போனால் ஊர் என்ன சொல்லும்.
எல்லாரும் வெளிநாட்டில சொகுசா இருந்து கொண்டு தாயைக் கைவிட்டிட்டினம் எண்டுதானே சொல்லுவினம்...
எங்களுக்குத்தானே வெக்கக்கேடு.."

"அப்பிடி ஏன் நினைக்கிறியள். அம்மாவின்ர சந்தோஷம் தானே பிள்ளையளுக்கு முக்கியம்"

"அம்மாவுக்கு இனி என்ன?
வயது போனவதானே.
என்னோட வந்து லண்டனில சொகுசாகப் பொம்மைபோல இருக்க வேண்டியதுதானே. ராணி மாதிரி இருக்கலாம்..."


'ஆம் அரண்மனைக்குள் சிறைப்பட்ட ராணிதான்' நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை.


"..எங்களுக்கு எங்கட மானமும் மரியாதையும்தான் முக்கியம்.
அவ என்ன நினைச்சாலும் பரவாயில்லை"

கோபத்துடன் தாயை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

அடுத்த வாரம் மருந்திற்கு அவர்கள் வரவில்லை. லண்டனுக்குப் போய்விட்டதாக எதிர்வீட்டுக்காரர் சொன்னார்.


மகளின் லண்டன் அப்பார்ட்மெண்ட் வரவேற்பறையில் சோகம் கவிழ்ந்த முகத்துடன் வயதான அலங்காரப் பொம்மை ஒன்று வீற்றிருக்கும்.

மல்லிகை சஞ்சிகையிலும் பின் மல்லிகை வெளியீடான 'டொக்டரின் டயறியிலிருந்து' நூலிலும் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி  
 
நன்றி:-  மல்லிகை

Post Comment

6 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பாவம், அந்த தாய்.

சுந்தரா said...

பாவம்தான் அந்த அம்மா...
ஆனால்,முதுமையில் அம்மாவைத் தனியேவிட விருப்பமில்லாத மகளையும் குறைசொல்லமுடியவில்லை.

ஊரில் சுதந்திரமாய் இருந்த பெரியவர்களுக்கு இங்கே வெளிநாட்டில்வாழப் பிடிக்காதுதான்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ஆமாம் சைவகொத்துப்பரோட்டா. பெரும்பாலான வயதானவர்கள் பிள்ளைகளிடம் தங்கியிருக்க வேண்டியிருப்பதால் அவர்களது உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

ஹுஸைனம்மா said...

தற்காலத்தில் எல்லா வீடுகளிலும் நடக்கும் விஷய்ம இது. வயதான பெற்றோரைத் தனியே விடமுடியாத மக்கள், பிறந்த மண்ணைவிட்டு வரவிரும்பாத பெற்றோர்... நான் என்ன செய்வேனோ?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

கருத்துரைக்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா, மற்றும் ஹுஸைனம்மா.
இந்தப் பிரச்சனைக்கு ஒட்டு மொத்தமாக ஒரே வித முடிவு எடுக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க