Saturday, March 13, 2010

தீராத நோய் தீர்த்த வோட்டர் தெரபி

தலையை அழுத்திப் பொத்திக் கொண்டு வந்திருந்தாள். வெண்மையான அவளது முகம் சாம்பல் பூசினாற் போல சோர்ந்திருந்தது. கண்களின் கீழ் கருமை பூத்திருந்தது. சோர்வும் அயர்ச்சியும் உடலெல்லாம் வியாபித்துப் பிசுபிசுத்தது.


எங்கே எனக்கும் ஒட்டிவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு எனது கொன்ஸ்சல்டேசன் அறை முழவதும் நீக்கமறப் பரவியது.

"தாங்க முடியவில்லை. தலை சிதறுமாப் போலிருக்கு..." என்றவள்,

"வேலைக்குப் போக வேணும். சோட் லீவிலை வந்தனான். கெதியிலை மாத்திவிடுங்கோ" நேர்த்தியான ஆங்கிலத்தில் அவசரப்பட்டாள்.
அவசரப்படுத்தவும் செய்தது தொனி.

அவளிலிருந்து எத்திப் பறந்த எரிச்சலும் சலிப்பும் என் மூஞ்சியில் ஒட்டிக் கொண்டது.

வழித்து எறிந்து விட்டு புன்னகைக்கும் முகமூடியைப் போர்த்திக் கொண்டேன்.

அதற்கிடையில் அவளது செல்பேசி உருகி உருகி அழைத்தது. விருட்டென ஹான்ட் பாக்கைத் திறந்தாள்.

"உன்னை அழைத்தேன். காதில் விழவில்லையா" என சிங்களத்தில் சிருங்காரமாக அவளுக்கென ரகசியம் போலப் பாட ஆரம்பித்தது,

திடீரென ஊரெல்லாம் எதிரொலிக்குமாறு வீறு கொண்டது.


அந்த ஓலியின் வேகத்தில் கழன்று நழுவி விழ முயன்ற புன்னகை முகமூடியை அழுத்திப் பிடித்து மீண்டும் ஒட்ட வைத்துக் கொண்டேன்.

"சரியான வருத்தம். டொக்ரட்டை மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறன். முடிஞ்சதும் நேரை ஒவீசுக்குத்தான் வருவன்" என்றாள் சலிப்புடன் செல்பேசியில்.

அவளுக்கு சில மாதங்களாகவே
பொறுக்க முடியாத தலைவலி.
தலையை அழுத்துவது போலவும்,
தலை சிதறுமாப் போலவும் இருக்குமாம்.
காலையில் தொடங்கிவிடும்.
வெயில் ஏற ஏற வேகம் கூடிக்கொண்டே போகுமாம்.

மாலையில் சற்றுத் தணிந்துவிடும்.

பகல் முழுவதும் சினமாகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறதாம்.

பலரிடம் மருந்து எடுத்துவிட்டாள்.

கண் டொக்டரிடம் காட்டியபோது அவர் கண் பார்வையில் பிரச்சனை ஏதும் இல்லை. கடும் வெளிச்சம் காரணமாக இருக்கக் கூடும் என ரின்டட் கண்ணாடி கொடுத்தார்.

காது மூக்கு தொண்டை நிபுணரிடமும் (ENT Surgeon) இவள் செல்லத் தவறவில்லை. அவர் சைனஸ் நோயாக இருக்கலாம் எனக் கூறி இரண்டு வாரங்களுக்கு அன்ரிபயடிக் மற்றும் வலி நிவாரணிகள் கொடுத்தார்.

குணமாகவிட்டால் இரண்டு வாரத்தில் வருமாறு கூறினாராம்.
இவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

மூளைக்குள் கட்டி, கண்டல் ஏதாவது இருக்குமா என்ற எண்ணத்தில் இறுதியாக மூளை நரம்பியல் நிபுணரிடம் சென்ற போது CT Scan உட்பட பல பரிசோதனைகள் செய்தார்களாம்.  எல்லாNk ஒழுங்காக இருக்கிறது என்று சொன்னாராம்.

என்ன செய்வது யாரிடம் போவது என்பது புரியாமல் என்னிடம் ஆலோசனைக்காக வந்திருந்தாள்.

இவள் வந்த கோலமே இவளுக்கு மன அழுத்தம் இருப்பதைப் புலப்படுத்தியது.


மருத்துவரிடம் வந்திருக்கும் சொற்ப இடைவெளிக்கு உள்ளாகவே பணி புரியும் இடத்திலிருந்து அழைப்பு வருகிறது எனில் அங்கு எத்தகைய கடுமையான வேலைப் பளு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் ஆறுதலாகவும், விபரமாகவும் கேட்டதில் கணக்காளராக இருப்பதாகவும், வேலை அதிகம் எனவும்,
இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையைத் தனியே செய்வதாகவும் கூறினாள்.

மன அழுத்தம், வேலைத் தள நெருக்கடி போன்றவை உடல் நோய்களாக வெளிப்படும் என்பதைப் விளக்கினேன். ஆனால் அவளுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

'தலை வலிக்கிறது, உடல் சோர்கிறது' இவற்றிற்கு மனம்தான் காரணம் என்பதை அவள் முழுமையாக நம்பத் தயாராக இல்லை.

இருந்த போதும் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கான எனது ஆலோசனைகளை கேட்கத் தவறவில்லை. சில மருந்துகளையும் பரிந்துரை செய்தேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்தாள்.

படுக்கையில் ஏதோ பூச்சி கடித்ததனால் ஏற்பட்ட வீக்கத்திற்கு காட்டுவதற்காக. ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏதும் இல்லாத சாதாரண பிரச்சனை என்பதால் விரைவில் வேலை முடிந்துவிட்டது.

அவளது தலையிடி பிரச்சனை எப்படி இருக்கிறது என விசாரித்தேன்.

சஹாரா பாலைவனத்தில் நீர் வரட்சியால் நாக்கு உலர்ந்தவள் நீர் விழ்ச்சியைக் கண்டது போல முகம் மலர்ந்தாள்.


"இப்ப மூன்று மாசமாக நல்ல சுகம். தலையிடியே கிடையாது" எனக் கூறினாள்.

நான் கூறியவற்றை ஒழுங்காகச் செய்திருக்கிறாள் என்பதால் வனாந்தரத்து நீர் வீழ்ச்சி என் பக்கம் திரும்பியது போலக் குளிர்சியாக இருந்தது.


"எப்படிக் குணமாகியது?" என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

அவளது விடையால் மேலும் மகிழ்வடைவதை எதிர்பார்த்து என் ஆழ்மனம் வேண்டியிருக்க வேண்டும்.

முகமூடி இன்றியே முகம் மலர்ந்தேன்.


"என்ரை பிரண்ட் ஈ மெயில் அனுப்பியிருந்தா.
வோட்டர் திரப்பி செய்யச் சொல்லி .
இப்ப தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு கிளாஸ் தண்ணி குடிக்கிறன்.
இது தொடங்கிய பிறகு தலையிடியே வாறதில்லை'


சற்றுத் தயக்கத்தின்தான் பின் சொன்னாள்.

நான் ஏதாவது இடக்கு முடக்காச் சொல்லக் கூடும் என்பதால் எற்பட்ட தயக்கமாக இருக்கலாம்.

"வலு சந்தோசமாக இருக்கு. இவ்வளவு சிம்பிளான முறையில் உங்கள் தலையிடியைத் தீர்த்து வைத்த நண்பிக்கு நானும் நன்றி சொல் வேண்டும்"
என  முக மலர்ச்சி மாறாது சொல்லி வைத்தேன்.


ஆயினும் உள்மனத்தில் அவளது தலையிடி மாறியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் எனத் தோன்றியது.

"அப்ப... வேலை எப்படி?"

"நான் பழைய வேலையை விட்டுவிட்டன்.
இப்ப வேறை இடத்திலை வேலை செய்கிறன்.
வேலை கடுமை இல்லை.
நேரத்திற்கு போய் நேரத்திற்கு வீட்டுக்கு வாறன்.
பொஸ்சும் நல்லவர்.
கூட வேலை செய்யிறவையும் நல்ல பிரண்ட்ஸ்சாக பிழங்குகினம்'

என்றாள் மகிழ்ச்சியுடன்.

'ஓகோ! வேலைப் பளுவும், மனஅழுத்தமும் புதிய வேலையில் தீர்ந்துவிட்டது. அதனால் தலையிடி தானாகவே மறைந்துவிட்டது' என்பது புரிந்தது.

ஆயினும் அதனை வெளிப்படையாகச் சொல்லவா முடியும்.

'நல்லதாகப் போச்சு.
மனதுக்கு நிறைவான அந்த வேலையை இறுகப் பிடிச்சுக் கொள்ளுங்கள்.' என்று சொல்லி விடை கொடுத்தேன்.

காகம் இருக்கப் பழம் விழுந்தது.

தண்ணீர் குடிக்கத் தலைவலி தீர்ந்தது.



 நன்றி :- வீரகேசரி

0.0.0.0.0

Post Comment

3 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நகைச்சுவை கலந்து சொன்ன பாணி நன்றாக இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

மனமே மருந்து. :-))

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா. ஹுஸைனம்மா

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க