Friday, December 4, 2009

லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல ...

எங்களுடைய பாரம்பரியத்தில் வந்த
இன்னுமொரு அரிய பழக்கத்தையும்
இங்கு ஞாபகப்படுத்தலாம்.
அது இளகிய மனம் பற்றியதும்கூட.

நாங்கள் மனிதர்களில் மாத்திரம் அன்பு கொண்டவர்களல்ல.

விலங்குகளுக்கும், மரஞ்செடி கொடிகளுக்கும் எமது அன்பு வட்டம் விரிகிறது.

தெருவோரம் வேலிகளுக்கு ஊன்று கோலாக நாட்டப்பட்டுள்ள பூவரசு, கிளிசெறியா, கிளுவைக் கதியால்களும் எமது அன்பைப் பெறத் தயங்குவதில்லை.

அதுவும் எமது வீட்டுக் கதியால்களுக்கு என்றில்லை. அக்கம்பக்கத்து வீட்டுக்காரரின் கதியால்களுக்கும், நாம் நடந்து செல்லும் வீதிகளின் முகமறியாதவர்களின் வீட்டுக் கதியால்களுக்கும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்கிறது.

ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தால் தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை அச்சொட்டாகக் கடைப்பிடிப்பவர்களல்லவா நாம்?

கதியால்கள் நீரின்றி வாடியும்
போஷாக்கின்றி வெளிறியும்
கிடப்பதைக் கண்டால்
எம் மனது தாங்கவே தாங்காது.


உடனடியாகவே யூறியா கலந்த நீரூற்றி உதவிடுவோம்.
இதற்காக நாலு பேர் பார்க்கும் வீதியில் நின்று
கோவணத்தைக் கழற்றக்கூட
நாங்கள் தயங்குவதில்லை.

இயற்கை நமக்கு எவ்வளவோ கற்றுக் கொடுத்திருக்கிறது. நாய்களும்தான்.

லைட் போஸ்டைக் கண்டதும் அவை மூன்று காலில் நின்று மோனத் தவம் செய்து தீர்த்தம் தெளிப்பது எம் சிந்தையைக் கவர்ந்ததால்தான் நாமும் கதியால்களைக் குளிர்விக்கிறோம் போலும்.

இரண்டாயிரம் ஆண்டு காலமாயிருந்தாலும் எங்களை நவீன காலத் திற்கும் நாகரீகத்திற்கும் ஏற்ப மாறாத பழமை விரும்பிகள் என எவரும் எம்மைக் குறைகூறவும் நாம் இடமளிப்பதில்லை.

கொழும்பில் கதியாலைக் காணமுடியாது என்பதால் துவண்டுவிடுவ தில்லை.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப எம்மை மாற்றிக் கொள்ளும் மனவிரிவு கொண்டவர்கள்.


இதனால் லைட் போஸ்டுகளையும் மதில் களையும் சிறுநீர் கொண்டு அடியோடு பிரட்டி வீழ்த்த முக்கி முயல்வோம்.

இதைப் பார்த்து சகோதர இனத்தவர்கள் மூக்கில் கைவைத்து ஆச்சரியப் படுவதுண்டு.

சிலவேளை அவர்களும் எங்களோடு சேர்ந்து முயற்சிப்பதும் உண்டு.

மரங்களையும் மதில்களையும் குளிர்விக்கும் ஆர்வத்தில் அந்த வீட்டில் வதிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வீதியைப் பயன்படுத்து பவர்களுக்கும் நோய்களைப் பரப்புகின்றோமே என்ற கவலை கிஞ்சித்தும் எமக்குக் கிடையாது.


தீர்த்தம் என்றதும் இன்னுமொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அன்று ஒரு குழந்தையை அதன் அம்மம்மா தூக்கிக் கொண்டு வந்திருந்தா.

கூட குழந்தையின் அம்மா. அவள் கைகள் இரண்டும் போதாத அளவிற்கு கூடைகள், பைகள். அவற்றில் குழந்தையின் பொருட்கள் நிறைத்திருந்தன. அவசரத் தேவைக்கானதாம்.

பாவம்! தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். போத்தல், பிளாஸ்க், சீனி, கரண்டி, பிரஸ் இத்தியாதி. பாரத்தை அருகிலிருந்த மேசையில் பொத்தென இறக்கினாள்.

நல்ல வேளையாக காஸ் குக்கரைக் காணாதது நிம்மதியளித்தது. அதுவும் இருந்திருந்தால் அதிலேயே அடுப்பை மூட்டி தண்ணியைக் கொதிக்க வைத்துப் புட்டிப்பால் தயாரித்திருப்பாள்!

குழந்தைக்கு இரண்டு நாட்களாக வயிற்றோட்டமாம். குழந்தை அம்மம்மாவின் மடியில் வாடிக்கிடந்தது.

நோயின் விபரத்தை அவர்களிடம் கேட்டுக் கொண்டே குழந்தையைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். மேலோட்டமான பரிசோதனையை முடித்துக் கொண்டு வயிற்றுப் பக்கம் மெதுவாகக் கையை வைத்தேன்.

திடீரென முகத்தில் இளஞ்சூட்டு நீரினால் அபிஷேகம். என்ன எது என்று நிதானிப்பதற்கிடையில் அம்மம்மாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.

"பிள்ளை டொக்டருக்குத் தீர்த்தம் கொடுத்துவிட்டது" என மனம் நிறைந்து முறுவலித்தாள்.


நல்லகாலம் 'சந்தனமும்' சேர்த்துத் தரவில்லை.

தீர்த்தத்தால் புனிதம் பெற்ற முகத்தைக் கழுவ நான் வாஷ் பேசினை நோக்கி ஓடினேன்.

இப்பொழுதெல்லாம் யாராவது குழந்தையைக் கொண்டுவந்தால் நான் முதலில் அதன் முகத்தைப் பார்ப்பது கிடையாது.

கண்கள் தன்னையறியாமல் கீழேதான் போகும். ஆணா? பெண்ணா? எனப் பார்க்கிறார் எனத்தான் பெற்றோர்கள் நினைப்பார்கள்.

நப்பின் துணி கட்டிக் கொண்டு வராவிட்டால் ஒரு சிறு முன்னேற்பாடு.

குழந்தையின் தலையை எனது பக்கமும் காலை கூட வந்தவரின் பக்கமும் இருக்குமாறு கிடத்திய பின்னர்தான் எந்தக் கதை காரியமும் நடக்கும்.

தீர்த்தம் வந்தால் கூட கொண்டு வந்தவருக்குக் கிடைக்கட்டுமே!

பல ஆண்டுகளுக்கு முன் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Post Comment

5 comments:

இலங்கைத் தமிழ்ப் பதிவர் said...

அன்பின் பதிவர்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு

வேந்தன் said...

உங்கள் அனுபவம் நல்லாயிருக்கு.
ஆத்திரத்தை அடக்கினாலும் ..த்திரத்தை அடக்க முடியுமா?

http://skylinelk.blogspot.com/2009/11/blog-post_30.html

எஸ் சக்திவேல் said...

இதை வாசித்தும் நீண்ட நேரம் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால், நம் நாட்டில் "toilet /urinals" என்பன இருந்தால் நல்லது, இல்லாவிட்டால் பாதகமில்லை என்பதுதான் எழுதாத விதி. இங்கு (சிட்னி) , நாம் ஊரில் செய்த அதே வேலையைப் பார்த்தால் போலீஸ் பிடித்துக் கொண்டுபோய் விடும் என்று கேள்விப்பட்டேன். பரீட்சித்துப் பார்க்கவில்லை :-). முதலாம்/ இரண்டாம் வகுப்புப் படிக்கும் பொது, பள்ளிக் கூடப் பின்சுவரில் வரிசையாக நின்று ஆர் கூடத் தூரம் அடிக்கமுடியும் என்று போட்டி வைத்தது இன்னும் மறக்கவில்லை. யாழ்ப்பாணம் "newmarket" இல் ஒரு பொதுக் கழிப்பிடம் ஒன்று இருந்தது. உள்ளே போகமுன் மூச்சை நிறுத்தினால், பிறகு வெளியில் வந்தபின்தான் மூச்சு விட முடியும்.

நிலாமதி said...

யாழ்பாணத்தில் அந்த பெயரில் ஒரு ஒழுங்கை கூட உண்டு...........

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ஆம் சக்திவேல். இப்பாழுதும் அப்படிப்போலத்தான் இருக்கும் என நினைக்கிறேன். "newmarket" டொயிலட் அருகே போகும்போதே மூக்கைப் பொத்த வேண்டியிருந்தது. சென்ற வருடம். இப்பொழுது எப்படியோ?

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க