Sunday, November 29, 2009

இருமலுக்கு சூப்பர் மருந்து

"அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.

அவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.

நல்ல மருந்தா தாங்கோ!"

"நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்".

முகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு
சொன்ன போதும்
அவருக்கு எனது நக்கல் புரிந்துவிட்டது.
புரிய வேண்டும் என்றுதானே சொன்னேன்.

'சொரி டொக்டர். சும்மா பேச்சுக்கு சொன்னனான்' என்றார்.

அவருக்கு வயது 60 இருக்கும்.
அவரின் அம்மா 80தைத் தாண்டியவர்.

எந்த நோயாளியும் மருத்துவரைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.
தனிப்பட்ட வேறுபாடுகள் கிடையாது.
தன்னிடம் வந்தவரது நோயைத் தணிப்பதுதானே மருத்துவரின் கடமை.

நோயாளியின் தற்போதைய நோய் மற்றும் உடல் நிலை ஆகியவற்றைக் கவனித்து அதற்கேற்ற மருந்தைக் கொடுப்பார்கள்.

ஒருவருக்கு நல்ல மருந்து மற்றவருக்கு கூடாத மருந்து எனக் கொடுப்பது தொழில் தர்மம் அல்ல.

தொழில் தர்மத்தை கணக்கில் எடுக்கா விட்டால் கூட, நோய்க்கு ஏற்ற மருந்து கொடுக்காவிட்டால் சிகிச்சைக்கு வந்தவரது நோய் குணமாகாது.

'கைராசியில்லாத டொக்டர்',
'அக்கறையில்லாதவர்',
'நோய் பிடிபடாதவர்'
போன்ற பல வாய்மொழிப் பட்டங்கள் கிடைப்பதை எந்த மருத்துவர்தான் விரும்புவார்.


'நல்ல கத்தரிக் காயாப் பொறுக்கிப் போடு மேனை',

'அரிசி முதல் தரமாத் தாங்கோ',

'பெஸ்ட் கிளாஸ் சீலையாக எடுத்துக் காட்டுங்கோ'

என்று கேட்பது போலத்தான்.

'நல்ல மருந்தாத் தாங்கோ' என்பதும்.

வெறும் பழக்க தோசம்.

எனவே நான் கணக்கில் எடுப்பது கிடையாது.

அம்மாவைப் பரிசோதித்து அவவிற்கான மருந்துகளை எழுதிக் கொண்டிருந்தேன். மகனின் திருவாய் மீண்டும் திறந்தருளியது.

'அம்மாவின்றை இருமலுக்கு arrack கொடுக்கலாமோ'

இருமலுக்கு அரக்கா?


அதைக் கொடுத்தால் போதை உண்டாகும்.
மதுப் போதையில் இருமுவது புரிவதில்லையே ஒழிய நோய் தணியாது.

பழகிவிட்டால் விடவும் முடியாது.

'கொடேன்' என்ற மருந்து சற்றுப் போதை கொடுக்கக் கூடியது. இது கலந்த ஒரு இருமல் சிரப் இலங்கையில் நல்ல பிரபலம்.

பலர் தாங்களாகவே அதனை வாங்கி உபயோகித்து. 'சுகம்' கண்டனர்.

விற்பனை அமோகமாகியது.
பலர் 'மருந்துப் போதையில்' திளைத்தனர்.

மருத்துவத்துறையினர் விழித்துக் கொண்டனர்.
இதனால் மருத்துவரின் சிட்டை இன்றி அம் மருந்து விற்பதை அரசு தடைசெய்ய நேர்ந்தது.

எனது சிந்தனைகளை அவர்களுக்கு புரிய வைப்பதற்கான சொற்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அவரது அடுத்த கேள்வியும் எழுந்தது.

'அம்மாக்கு பசியும் இல்லை. பிரண்டி கொடுக்கலாமோ'

அரக், பிரண்டி தவிர இவருக்கு வேறு மருந்துகளே தெரியாதா?

'கொடுக்கலாம்' என்றேன்.

எனது விடையைக் கேட்ட புழுகத்தில் மலர்ந்த அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன்.

கன்னம் அதைத்திருந்தது.
கண்களின் கீழ்மடலில் வீக்கம்.
முகம் பொருமியது போலிருந்தது.
கண்களில் அசட்டுத்தனமான ஒரு கிறங்கல்.


'நல்ல தண்ணிச்சாமி போலை' என மனம் கணித்தது.

அவருக்கு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுவது மது என்பது புரிந்தது.

அதனையே அம்மாவுக்கும் கொடுத்துப் பழக்கிவிட்டால் அவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அவசரத்திற்குக் கை கொடுக்கும்.

அம்மாவிற்கு என வாங்குவதில் மகனுக்கும் பங்கு இருக்கத்தானே செய்யும். சொத்தில் பங்கு கிடைப்பது போல.

"கொடுக்கலாம்..."

".....அம்மாவையும் குடிக்கு அடிமையாக்க வேணுமெண்டால்"
என்றேன் சற்று அழுத்தமாக.


மதுவால் சினந்திருந்த
முகம் மேலும்
செம்மை பூத்தது.

மதுப் பாவனையின் தீமைகள் பற்றி ஆழமாக அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

Post Comment

6 comments:

melina said...

vannakkam doctor
nallavelai kaimarundhaga than thaaiku madhu vahaigalai kodukkaathirunthare ena siridhun immadhiyaga irundhathu. andha thaayai ninaithum kavalai patten.ethai pondru ungaluku ethanai anubavangalo? erudhiyil neenga sonnadhu maganuku uraithirukkumo ennavo!

கலை said...

சின்ன சின்ன விசயமானாலும் சுவாரசியத்துடன் சொல்கிறீர்கள்.

suvaiyaana suvai said...

interesting!!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி melina,கலை, suvaiyaana suvai

PRAKASH said...

இப்பிடியும் சில ஜென்மங்கள்.

Anonymous said...

Just want to say what a great blog you got here!
I've been around for quite a lot of time, but finally decided to show my appreciation of your work!

Thumbs up, and keep it going!

Cheers
Christian, iwspo.net

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க