Tuesday, November 17, 2009

70 வயதில் 50கிலோ எனில் 35 ல் எவ்வளவு எடை ?


குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அம்மம்மா, அம்மா, அப்பா, பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகள்.

அனைவருக்கும் வருத்தம் என்றில்லை. அம்மம்மாவிற்குத்தான் வருத்தம்.

வீட்டில் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு வர முடியாது.

ஓன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும்.
காயங்கள் தேடும்.
பொருட்களை உடைக்கும்.

எனவே அனைத்துப் பிரளிகளும் செய்வதற்காக இங்கு கூட்டி வந்திருந்தார்கள்.

பிரஷர் மீட்டரின் பல்பை பிடித்து காற்று அடித்துக் கொண்டிருந்தது ஒன்று.
பரிசோதனைக் கட்டிலை நாட்டிய மேடையாக்கி அக்கறையுடன் பயிற்சி எடுத்தது மற்றொன்று.
வாயிற் கதவுப் பிடியை முறுக்கி ரிப்பயர் செய்து கொண்டிருந்து கடைசி.

நீரிழிவு, பிரஷர், கொலஸ்டரோல் என அனைத்தும் அம்மம்மாவிடம் தஞ்சம் புகுந்திருந்தன.

சுகர், பிரஸர்,இருதயம் எனப் பலவும் சோதிக்க வேண்டியிருந்தன.

அவவைப் பரிசோதிப்பதற்கு மேலாக
எனக்கு
மூன்று சோடிக் கண்கள் தா இறைவா
என வேண்டிக் கொண்டேன்.

ஏதாவது உடைகிறதா, முறிகிறதா என ஒரே நேரத்தில் அவதானிக்க!

மருந்தறையில் குழந்தைகளின் கூப்பாட்டு சத்தத்தில் எனது வேண்டுதல் இறைவன் காதில் விழவே இல்லை.

நான் சற்றுத் திரும்பி எடை பார்க்கும் கருவியை எடுத்து அதில் அம்மம்மாவை ஏற்றி எடை பார்க்க முயன்றேன்.

திடீரென சைலன்ஸ் பீரியட் பெல் அடித்தது போல சத்தங்கள் அடங்கி அமைதி குடிகொண்டது.

எல்லோர் கண்களும் திரும்பி அம்மம்மாவற்கு நடப்பதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தன.

எடை பார்த்து முடிய அம்மம்மா Weighing Scale லிருந்து இறங்கினா?


பாடசாலை விடும் கடைசி பெல் அடித்தது போன்று பல்வேறு ஸ்தாதியில் குரல்கள் ஒரே நேரத்தில் விண்ணை அடக்க எழுந்தன.

'நானும் பார்க்கப் போறன்.'

'என்னை முதலில் விடு.'

' இறங்கு கெதியா இல்லாட்டல் பல்லை உடைப்பன்'

ஓசைகளின் அமர்க்களத்தில் ஒரு சிலதான் காதில் விழுந்தன.

எல்லோரது எடைகளும் பார்த்து முடிய Weighing scale அனுங்கியது

அம்மமாவின் எடை 50 கிலோ. அதனை பதிந்த கொண்டே 'உங்கடை நிறை சரியாக இருக்கு என்ற போது,
'அப்ப என்ரை வயசுக்கு நிறை எவ்வளவு இருக்க வேண்டும்'
என்று கேட்டாள் மகள்.

'அம்மம்மாவிற்கு வயது 70. நிறை 50 கிலோ.
உங்கடை வயது 35 இருக்கும்.
அப்ப நிறை அரைவாசிதானே. 25' என்றேன்
கிண்டல் வெளிவராத தொனியில்.

'சும்மா பகடி விடாதயுங்கோ டொக்டர். 10 வயது மகளுக்கே 25க்கு மேலை'

புரிய வைப்பதற்காக சொன்ன பகடிதானே.

'15 16வயது வரைதான் வயசுக்கு ஏற்ற எடை பார்க்கிறது.
அப்பவும் அவர்களுடைய உயரத்தையும் கவனத்தில் எடுப்போம். வளர்ந்தவர்களுக்கு அவர்களது உயரத்திக்கு ஏற்பவே எடை பார்க்க வேண்டும்'
உண்மையில் உடையை விட உடற்திணிவையே இப்பொழுது (Body mass index) முக்கியமாகக் கவனத்தில் எடுக்கிறார்கள்.

உங்கள் உடற் திணிவு எவ்வளவு,
அது சரியானதா, கூடியதா, குறைவா
என அறிய இங்கே
கிளிக் பண்ணுங்கள்

நன்றி: வீரகேசரி

Post Comment

9 comments:

வந்தியத்தேவன் said...

சிரிப்பு ஒரு மருந்து என்பதை இந்தக் கட்டுரையில் உணர்த்தியிருக்கின்றீர்கள். படங்களும் அருமை. எனது நிறையும் உயரமும் சரியாகவே இருக்கின்றன.

துளசி கோபால் said...

டொக்டர் ஐயா,

உங்க வீட்டுப்பெயரை இப்பத்தான் பார்த்தேன். 'ஸ்டெத்தின் குரல்'. சூப்பர் போங்க!!!

22 வயசில் 37 கிலோவா இருந்தவள் என்பது மட்டுமே ............. நினைச்சு மகிழும் ஒரு விசயமா ஆகிப்போச்சு.

மேற்'கை' மட்டும் இளைக்க எதாவது பயிற்சியோ மருந்தோ உண்டா?

தட்டச்சு செய்யும் எக்ஸர்ஸைஸ் தினமும் பலமணி நேரம் செஞ்சும் கை இளைக்கலை!

ராமலக்ஷ்மி said...

குழந்தைகளின் கும்மாளத்தைப் பற்றிய விவரிப்பை மிகவும் ரசித்து வாசித்தேன் டாக்டர்:))!

என் நட்சத்திர வாழ்த்துக்களும். நட்சத்திரப் பகுதியில் இடுகை இருந்தாலும் தமிழ் மணத்திலும் இணைக்கவேண்டுமல்லவா? அதை செய்தால்தானே மறுமொழி திரட்டப் பட்டு இன்னும் பலர் வாசிக்க ஏதுவாக இருக்கும்? கவனியுங்கள் டாக்டர்!

suvaiyaana suvai said...

நல்லா காமெடியா எழுதியிருக்கீங்க!! குண்டானால் இவ்வளவு பிரச்சனையும் வருமா? ஒல்லியா இருந்தா வாய்ப்பு கம்மியா?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி வந்தியத்தேவன், துளசி கோபால், ராமலக்ஷ்மி, மற்றும் suvaiyaana suvai.

தட்டச்சு எடை குறைப்பிற்கான எக்ஸர்ஸைஸ் அல்லவே துளசி கோபால். கையைக் காலை ஆட்டி வியர்க்க வேகமாக நடப்பது போன்ற பயிற்சிகளுடன், உணவுக் கட்டுப்பாடும் எடை குறைப்பிற்கு அவசியம் என்பது நீங்கள் அறியாததா?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ராமலக்ஷ்மி, சமையலுக்கு உப்பு புளி போட்டு சுவையாக்குவது போல எமது மருத்துவ மனையில் நிகழ்பவற்றிற்கு சற்று கற்பனைச் சுவை சேர்த்தேன். கருத்திற்கு நன்றி.

ஆம் சுவையான சுவை,
ஒல்லியா இருந்தால் நீரிழிவு, பிரஷர், கொலஸ்டரோல், மாரடைப்பு போன்ற பல நோய்கள் வருவதற்கதன வாய்ப்புகள் மிகவும் கம்மிதான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
உங்களுக்குப் பொறுமை அதிகம்; நோயாளிகளின் பிள்ளைகள்; பேரப்பிள்ளைகள் விளையாட திடலாக
தங்கள் வைத்திய சாலையை அனுமதித்துள்ளீர்கள்.
இந்த நிறையை அளக்கும் அளவீட்டை வேறு ஒரு அன்பரும் இட்டிருந்தார். அதன் மூலம் என் நிறை 4 கிலோ அதிகம் என்பதை அறிந்து; அன்று முதல்
நிறைக்குறைப்பில் ஆர்வம் காட்டி வெற்றி கண்டு வருகிறேன். ஆனால் என் வைத்தியர் அந்த 4 கிலோ
அதிகம் இல்லையெனவே கூறியிருந்தார்.
எனினும் என் நண்பர்கள்; உடன் வேலை செய்வோர் , இப்போ என் உடல் தோற்றம் மாறியுள்ளதாகக் கூறுகிறார்கள். அதை நானும் நாளாந்தம் உணர்கிறேன்.
இதற்கு உங்களுக்குத் தான் நான் நன்றி கூற வேண்டும். தங்கள் பல கட்டுரைகள் அருமருந்து போன்றவை.
இது இலவசமாகக் கிடைப்பதால் பலருக்கு அருமை தெரியவில்லை.தொடர்ந்து எழுதுங்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எடையைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி கண்ட உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம் @யோகன் பாரிஸ். பலர் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்பாளடியாள் said...

வணக்கம் ஐயா .நீண்ட நாட்களின் பின் வந்துள்ளேன் மன்னிக்கவும் .எப்படி உள்ளீர்கள் ?.

எடையைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி கண்ட உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம் @யோகன் பாரிஸ்.
பலர் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம் இந்த விசயத்தில் என் பெயரும் அடங்கும் .என்னாலும் எடையைக் குறைக்க முடியவில்லையே .ஐயா .மிக்க நன்றி ஐயா தங்களின் பயனுள்ள பகிர்விற்க்குக் கருத்திடாது போனாலும் அவ்வப்போது இவைகளை நான் பார்க்கத் தவறுவதில்லை .நன்றி ஐயா பகிர்வுகளுக்கு .............

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க