Friday, September 4, 2009

ரம்புட்டான் காய்ச்சல்

அவள் ஒரு குட்டிப் பெண். வயது பத்திருக்கும். வெயிலில் காய்ந்த வற்றல் போல வாடி வதங்கிக் கிடந்தாள். மூக்கு நுனியில் வழிந்த சளி

துடைத்திருந்தபோதும் காய்ந்து, அலங்காரத்திற்காக பூசிய திருநீறு போல பட்டும் படாமலும் தோற்றம் காட்டியது.

நெற்றி அனல் பொலக் கொதித்தது. பாகைமானியை வைத்த போது 103 வந்ததும் பீப் பிப் சத்தம். அதற்கு மேல் எண்கள் நகராது கண்சிமிட்டின.

'ரா முழுக்க சரியான காய்ச்சல். முனங்கிக் கொண்டு கிடந்தாள். எங்களுக்கும் நித்திரையில்லை. வயிற்றைப் பிரட்டுது என்று சாப்பிடறாளும் இல்லை.' என்றாள் அம்மா.

'ஓம் இப்படியான காய்ச்சல் கடுமையாகத்தான் அடிக்கும். ஆனால் டெங்கு போல பயமில்லை...' என்று நான் சொல்லவும்,

'இதுகள் சொல்லுக் கேக்குதுகிளே! கண்டதையும் தின்னுறதும், குடிக்கிறதும்தான் வேலை. அதாலை சுத்திக் சுத்திக் காய்ச்சல். பெரிய தொல்லை'

'என்ன சாப்பிட்டுக் காய்ச்சல் வந்தது? ' என்று கேட்கும்போது நக்கல் அடிக்கும் தொனி வெளிப்படாது இருக்கும்படி கவனம் எடுத்தேன்.

'வேறை என்ன ரம்புட்டான்தான். கொஞ்ச நஞ்சமே பத்து பதினைஞ்சு என்டு திண்டு தள்ளிறாள்.'

ஓ! ரம்புட்டான் காய்ச்சல்.

இவள் மாத்திரல்ல, இந்த பத்து பதினைந்து நாட்களுக்குள் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தகைய காய்ச்சலுக்காகக் கொண்டு வந்துள்ளனர்.

இது ஜீலை மாதம். ரம்புட்டான சீசன். ரோட் ஓரமெல்லாம் தற்காலிக கடைகள். கடைகளில் மதாளித்த சிவத்த கம்பளிப் பூச்சிகள் போல குவிந்து கிடக்கும்.

பிள்ளைகள் என்ன பெரியவர்களே ரம்புட்டான் அமுக்குவதில் பின்நிற்பதில்லை. இவர்களில் பலர் காய்ச்சலுடன் வருகிறார்கள்.

நுளம்பு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல் வருகிறது, எலிகளின் எச்சங்களால் பரவுகிறது எலிக்காய்ச்சல், நோயுள்ளவர் தும்முவதாலும் இருமுவதாலும் தொற்றுகிறது பன்றிக் காய்ச்சல்.

இது போல ரம்புட்டான் காய்ச்சல் என்றொரு புதுக் காய்ச்சலா?

அது வருவது ரம்புட்டான் சாப்பிடுவதாலா? அது எவ்வாறு தொற்றுகிறது என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?

காய்ச்சல் நோய் என்பது பெரும்பாலும் கிருமிகள் தொற்றுவதாலேயே வருகிறது. ரம்புட்டான் சாப்பிடுவதால் எவ்வித காய்ச்சலும் வருவதில்லை. ஆனால் இது பரவலாகக் கிடைக்கும் காலங்களான ஜீன், ஜீலை மாதங்களில் பெரும்பாலும் தென்னிலங்கையில் மழை பெய்வதுண்டு. அதனால் டெங்கு, எலி முதல் சாதாரண தடிமன் காய்ச்சல் வரையான பல வித காய்ச்சல்கள் பரவுகின்றன.

வைத்தியசாலைகளில் காய்ச்சல் நோயாளிகள் நுளம்புகள் போல மொய்க்க நேர்கிறது. ரம்புட்டான் சாப்பிட்ட நேரத்தில் காய்ச்சல் வருவது என்பது தற்செயலாகத்தான் நடக்கிறது.

மேலே குறிப்பிட்டதை விளக்கி 'காய்ச்சல் வந்த உங்கள் பிள்ளைக்கு இன்றைக்கும் விருப்பமானால் ரம்புட்டான் சாப்பிடக் கொடுங்கள். எதுவும் நடக்காது' என்றேன்.

காய்ச்சலில் வாடிக்கிடந்த குழந்தையின் முகம் இதனைக் கேட்டதும் பிரகாசமானது.

தாயார் முகம் தொய்ந்தது.

'ரம்புட்டான் சாப்பிட முன்னர் பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

கழுவிய பின்னரும் கூட ரப்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.

கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ணுங்கள்.'

இதற்குக் காரணம் பழத்தின் தோல் பல விதமான அழுக்குகளால் மாசடைந்திருக்க வாய்ப்புண்டு.

பழங்களை பிடுங்கி நிலத்தில் போட்டிருப்பார்கள். நிலத்தில் நாய் பூனை போன்ற பிராணிகளின் மலம், குருவிகளின் எச்சம், மனிதர்களின் கழிவுகள் போன்ற பலவற்றிலிருந்த கிருமிகள் பழத்தின் தோலை மாசுபடுத்தியிருக்கும்.

அதே போல பழங்களைக் கொண்டுவரப் பயன்படத்திய சாக்கினாலும், வீதியில் பரப்பி வைத்திருக்கும் போது சூழலாலும் மாசடைந்திருக்கும். எனவே சுத்தமாகக் கழுவுவது முக்கியமானதாகும்.


இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.

ஒரு வேளை அந்தப் பிள்ளை அல்லது வேறெந்தப் பிள்ளையாயினும் ரம்புட்டான் பழங்களை கழுவாது வாயினால் கடித்துத் தோலை அகற்றி உண்டிருந்தால் தோலிலுள்ள அசுத்தங்களால் வயிற்றோட்டம், சத்தி, செங்கண்மாரி, குடற் பூச்சிகள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் ஆளாகக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

11 comments:

’டொன்’ லீ said...

:-) பலரிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகள் இவை...விழிப்புணர்வு அவசியம்...நன்றி :-)

மோகனன் said...

ரம்புட்டான் என்பது ஆப்பிள் பழமா மருத்துவரே... நான் தமிழகத்தில் பிறந்ததால் தெரியாமல் போயிற்றோ என்னவோ... நுளம்பு என்றால் கொசு என ஊகித்துக் கொண்டேன்.. சரிதானா மருத்துவரே...

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி தயாளன்.
நீங்கள் சொன்னது போல விழிப்புணர்வு பலவிடயங்களிலும் எமது சமூகத்திற்கு அவசியம்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எனது பதிவின் முதல் படமான பழக்கடையில் நடுவில் குவிந்து கிடப்பது mangostine.
வலதுபுறமாக சிவத்த நிறத்தில் இருக்கும் சிறிய குவியலில் உள்ளதுதான் rambutan. தோல் முழுவதும் முள் போல தும்புகளாக நீண்டிருக்கும்.
இடது பக்க மூலையில் பலாப்பழம் போல இருப்பது Durian Fruit. இவை இலங்கையில் கிடைக்கும். தமிழகத்தில் இவற்றை எவ்வாறு அழைப்பாரகள் என அறியேன். மன்னிக்கவும்.
மற்றொரு படத்தில் சீனப் பெண் வாயில் வைத்துக் கடிப்பதும் அதே rambutan.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

அ. நம்பி said...

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து முதலிய தென்கிழக்கு நாடுகளில் இப்பழங்கள் மிகுதியாக விளைகின்றன.

டுரியான், மாங்கீஸ், ரம்புத்தான் என்பன (durian, manggis, rambutan) மலாய்மொழிச்சொற்கள். மாங்கீஸ்(manggis)என்னும் மலாய்ச்சொல்லில் இருந்துதான் மங்குஸ்தீன் என்னும் (mangosteen)ஆங்கிலச்சொல் பிறந்தது.

duri - முள்
rambut - மயிர்

Dr.எம்.கே.முருகானந்தன் said...
This comment has been removed by the author.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
பொதுவாக ஒரு உணவை உண்டபின் ஏதாவது ஆனால் அதன் மேல் பழி போடுவது இயல்பு;
அறியாமை- நமக்குப் பொதுச் சொத்து.
ரம்புட்டானைப் படிக்க வாயூறுது. ஒரு காலத்தில் யாழ் பேருந்து நிலையமெங்கும் குலை குலையாகக் கட்டித்தூங்கும் அழகே தனி!
கொழும்பில் வேலை பார்ப்போர் மறக்காமல் கொண்டுவருவார்கள்.
இங்கே கிடைக்கிறது கிலோ 8 யூரோ.
நிற்க இது தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்காது. நான் சென்ற போது சென்னையில் விற்பனைக்கிருந்தது.
ஒரு வேளை இறக்குமதிதான் செய்கிறார்களோ? தெரியாது.
கூகிளில் மரம் நிறையப் பழத்துடன் படம் இருக்கிறது. நான் நேரில் இது வரை ரம்புட்டான் மரம் பார்த்ததில்லை.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

தகவலுக்கு நன்றி. இணைகிறேன். உலவு.காம் (ulavu.com)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பயனுள்ள உங்கள் தகவல்களுக்கு நன்றி அ. நம்பி.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அனுபவம் சார்ந்த உங்கள் கருத்துரை சுவையாக இருக்கிறது ரம்புட்டான் பழம் போல.
இங்கு கிலோ கணக்கில் வாங்குவதில்லை. சீஸனில் ஒரு பழம் ரூபா 5 ற்கு விற்கும்.

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க