Friday, July 31, 2009

கரிசனை


"டொக்டர் ஆபத்தான கேஸ், உடனை பார்க்கோணும்"

நம்பர் ஒழுங்கில் நின்றவர்களை விலக்கிக்கொண்டு விரைந்து முன்னுக்கு வந்த அவர் வாசலில் நின்று இரைந்து குரல் கொடுத்தார்.

நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நான் அவரது அவசர குரலால் கவனம் திரும்பி "என்ன வருத்தம்?... சரி, சரி... கொண்டு வந்து கட்டில்லை கிடத்துங்கோ" என்றேன்.

சுறு சுறுப்பான காலை நேரம். நோயாளர்கள் நிறையப்பேர் தங்களது நம்பர் எப்பொழுது கூப்பிடப்படும் என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையேதான் இந்த அவசரக்கோரிக்கை!

"உள்ளை கொண்டரட்டாம். டொக்டர் சொல்லுறார். இரண்டு பேர் கை குடுங்கோ, தூக்கிக் கொண்டு போய் கிடத்துவம்"

கட்டிலில் கிடத்தப்பட்ட அவரை மேலோட்டமாகப் பார்த்தேன்.

வயது எழுபத்தைந்திற்கு மேல் இருக்கும்.
காய்ந்த வேப்பமரப் பட்டைபோல் வரண்டு சுருங்கிச் சருகான தோல்,
முனை வெட்டப்பட்ட முட்டைக்கோதுக்குள் அடங்கிவிட்டது போல் இடுங்கிய கண்கள்,
பொக்கை வாய். ஆனாலும் இளமைக் காலத்து உடல் உழைப்பால் திரண்ட தசைநார்கள் இன்னமும் எடுப்பாகத் தெரிந்தன.

"அப்பு என்ன செய்யுது? சொல்லுங்கோ" என்றபடி நோயாளியின் முகத்தை மெதுவாகத் தட்டிப்பார்த்தேன்.

மறுமொழியில்லை கேட்ட கேள்வியை விளங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை.

கண் புருவங்களிடையே விரலால் ஊன்றி அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை!
மயக்கத்தில் கிடந்தார்.!!

"டொக்டர்! ஆளுக்கு என்ன வருத்தம்? கடுவலே? இசகு பிசகாக ஏதென் செய்து போடுமே?" என்ற கவலையுடன் கேள்விகளை அடுக்கினார், நோயாளியைக் கொண்டு வந்தவர்.

"அந்தரப்படாதையுங்கோ சோதிச்சுப் பார்த்துத்தானே சொல்லவேணும்"

நோயாளியின் அருகில் நெருங்கி, அவரது வாயைத் திறந்து பார்த்தேன். புளித்த கள்ளின் மணம் குப்பென நாசியைத் துளைத்து வயிற்றைப் புரட்ட வைத்தது.

"நல்லாக் குடிக்கிறவரே"

"ஓம் டொக்டர், மனிசியும் இல்லை, பிள்ளைகுட்டிகளும் இல்லை: சொத்துப்பத்தும் தாராளமாகக் கிடக்கு, பின்னை என்ன தாராளமாகப் பாவிப்பார்...ஆளுக்கு நிலமை எப்படியிருக்கு டொக்டர்?|

"இண்டைக்கு இவருக்கு என்ன நடந்தது?" - நான்

"காலயிலைதான் பொழுது விடிஞ்சு எட்டு மணியாகியும் அங்கினை ஒரு சிலமனையும் காணவில்லை எண்டு எட்டிப்பார்த்தன். கட்டிலிலை கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தன். எழும்பயில்லை. கிட்டப் போய் எழுப்பிப் பார்த்தும் எழும்ப யில்லை. மூச்சிருப்பது தெரிஞ்சிது..."

அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே, நான் நோயாளியின் நாடித்துடிப்பு, பிரஷர், கண், மற்றும் முக்கிய குணம் குறிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.

"... இனசனமில்லாத தனியாள். தானே சமைத்துத் தானே சாப்பிடுவார். வருத்தம் துன்பமெண்டாலும் பார்க்கிறதுக்கு நாதியில்லாத மனுஷன். பரிதாபத்தைப் பார்த்துப்போட்டு நான்தான் தூக்கிக் கொண்டு வந்தனான்..."

"கிழவனுக்கு எப்படி? ஏதேன் ஆபத்தே? வடிவாய் பார்த்துச் சொல்லுங்கோ"

மீண்டும் மிகுந்த கரிசனையுடனும் இனம் புரியாத ஆர்வத்துடனும் கேட்டார்.

அயல் வீட்டுக்காரனுக்கு இன்னொருவன் உதவுவது ஒன்றும் புதினமில்லைத்தான். ஆனாலும் நோயாளியின் உடல்நிலை பற்றித் திரும்பத்திரும்ப இவ்வளவு கரிசனையுடனும், கவலையுடனும், ஒரு வித ஆர்வத்துடனும் விசாரிக்கும் இம்மனிதனின் இயல்பு என் மனத்தை நெருடியது.

"பயப்பிடாதையுங்கோ, கொஞ்சம் கூடுதலாகக் குடிச்சிட்டார். சரியாகச் சாப்பிடயில்லைப்போலை. அதால அவற்றை உடம்பில சீனிச்சத்து குறைஞ்சு, ஆளை மயக்கிப் போட்டுது. அல்கஹோலிக் ஹைப்போகிளை சீமியா என்று சொல்லிறது...

"ஒரு ஊசி அடிக்க எழும்பிடுவார்"

"50cc of 50 % Dextrose" என நேர்சுக்கு ஊசி பற்றி அறிவுறுத்தல் கூறிவிட்டு, கதிரையில் அமர்ந்தேன்.

"டொக்டர் மறைக்கிறார் போலை, உள்ளதைச் சொல்லுங்கோ, உயிருக்கு ஏதும் ஆபத்தே?...நாங்கள் பயப்படமாட்டம்....மறைக்காமல் சொல்லுங்கோ"

இதென்ன எவ்வளவு சொல்லியும் கேளாமல் உயிருக்கு ஆபத்தோ என்று அரியண்டப்படுத்துகிறார் என எரிச்சல் வந்தது.

"அப்படி ஒன்றுமில்லை. இன்ஜெக்ஷன் போட எழும்பி விடுவார். ஆனால் இனி இப்பிடிக் குடிக்க விடக் கூடாது" என எரிச்சலை மறைத்துக் கொண்டு சொன்னேன்.

"இன்ஜெக்ஷன் ரெடி" நேர்ஸ்

நேர்ஸ் தந்த ஊசியை, நோயாளியின் இரத்த நாளத்தில் நேரடியாக ஏற்றி, மருந்தை உட்செலுத்தத் தொடங்கினேன்.

திரும்பவும் அருகே வந்தார்.

"டொக்டர் கோவிக்கக் கூடாது. மனுசன் பெரிய சொத்துக்காரன். இனசனம் கிடையாது பேசாமல் செத்துப்போனாரெண்டால் சொத்தெல்லாம் பாழாகிப் போகும்...."

"... அதுதான் உயிருக்கு ஆபத்தெண்டால் ஒரு பெருவிரல் அடையாளத்தை எண்டாலும் எடுத்துப் போட்டனெண்டால் பயமில்லை. பிரச்சனையில்லாமல் சொத்து பத்துகளை எல்லாம் என்ரை பேருக்கு மாத்திப் போடலாம்" எனத் தொடர்ந்தார்

நான் பதில் சொல்லவில்லை.

ஊசி ஏற்றி முடிந்தது.

கட்டிலில் கிடந்த கிழவன், அசதியுடன் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.

...........................................................

சிரித்திரன் இதழில் 1985 அளவில் எழுதப்பட்ட இக்கட்டுரை, பின்னர் ஒரு டொக்டரின் டயறி நூலின் இரண்டாவது கட்டுரையாக வெளியானது

Post Comment

2 comments:

மாதேவி said...

ஆகா! நல்ல "கரிசனை" டொக்டர்.

"பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்" என்று முதியோர்கள் சும்மாவா கூறிச்சென்றார்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி மாதேவி.அதனால் போலும் பிணம் போலக் கிடந்தவரும் எழுந்தார்.

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க