Friday, March 2, 2012

மலத்தோடு அட்டை போகும் அதிசய வியாதி


கேட்ட மாத்திரத்தில் நான் அதிசயித்துப் போனேன். எனது 37வருட மருத்துவத்தில் இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதே இல்லை.


ஆனால் அடுத்த கணமே இது உண்மையானது அல்ல என்பது புரிந்தது.

செய்தியைப் பகுந்தறிந்த எனது மூளை தெளிவாகக் கூறிவிட்டது.

இருந்தபோதும் அவள் வேண்டும் என்று பொய் சொல்கிறாள் என்று நான் கருதவேயில்லை.

"மலம் போகும் போது அட்டை அட்டையாகப் போகுது...சின்னஞ் சின்னனா கணக்கு வழக்கின்றிப் போய்க்கொண்டே இருக்கு... வருடக் கணக்கில்.."


அட்டை என அவள் கூறியது சாதாரண அட்டைப் பூச்சியை அல்ல.

இரத்தம் குடிக்கும் அட்டையை.

கூறியது உண்மையாக இருந்தால் அவளது உடலிலுள்ள கடைசித் துளிவரை அட்டைகள் உறிஞ்சிக் குடித்திருக்கும். இரத்த சோகையால் உடல் வெளிறிப்போய் நடக்க முடியாது மூச்சிரைக்க வந்திருப்பாள். இவள் உசாராகத்தான் வந்திருந்தாள்.


அவள் ஒரு மலையகப் பெண். பல வருடங்களாக கொழும்பில்தான் வசிக்கிறாள். வயது சரியாக 56 இன்னும் ஒரு மாதத்தில். வசதியானவள் அல்ல. நடுத்தரத்திலும் சற்றுக் குறைவான சமூகத் தராதரம் கொண்டவள்.

நைந்து போன பழைய ஸ்கேட்டும் பிளவுசும் அணிந்திருந்தாள். சற்று அழுக்கான ஆடைகள். குளித்து வரவில்லை. வியர்வை மணம் நாசியை உறுத்தியது. உடை அலங்காரத்தில் அசண்டையீனமும், சுகாதாரம் பேணுவதில் அக்கறையின்மையும் வெளிப்படையாகத் தெரிந்தன.

இந்த அவதானிப்புகள் அவளது நோய் பற்றிய முடிவுக்கு வருவதற்கு எனக்கு அவசியமானவை.

"..எத்தனையோ தரம் அரசாங்க ஆஸ்பத்திரில் மருந்து எடுத்து விட்டேன். அவங்கள் பூச்சிக் குளிசையைத்தான் அள்ளி அள்ளித் தாராங்கள். ஒரு சுகமும் இல்லை".

அவளைப் போல நானும் அரசாங்க ஆஸ்பத்திரி மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இவள் தமிழில் சொல்லியது புரிந்திருக்காது. இவளுக்கு அவர்களுக்கு புரியும்படி விளக்க முடியாது. நீண்ட கியூ காத்து நிற்கையில் இவள் புழு என்றால் என்ன பூச்சி என்றால் என்ன றழசஅள என்றுதான் அவர்கள் மனத்தில் பதிந்திருக்கும்.

பூச்சி பூச்சி பூச்சி எங்குமே பூச்சி....

நல்ல காலம் புளுக் காச்சல் என நினைத்து காய்ச்சல். சளிக் குளிசைகளைக் கொடுக்கவில்லையே என்பதை நினைத்து ஆறதல் கொள்ளலாம்.

'மலத்தை எடுத்துக் கொடுங்களேன். என்ன பூச்சி என்று பரிசோதித்துப் பார்க்கலாம்.'

இது அவசியமற்ற போதும் அவளது நம்பிக்கையை தவறென்று எடுத்துக் காட்ட உதவும் என்பதால் கேட்டேன்.

அவளுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. 'அதைப் பிறகு பாப்பம். இப்ப ஏதாவது மருந்து தந்து இந்தப் பிரச்சனையை உடனை தீருங்கோ' தீர்க்கமாகச் சொல்லிவிட்டாள்.

"மலத்தோடு போனது இப்ப தலையிலையும் வந்திடுத்து. ஊந்து ஊந்து தலையெல்லாம் திரியுது".

தலையை மூடியிருந்த மொட்டாக்குத் துணியை விலக்கி உச்சந் தலையைச் சுட்டிக் காட்டினா.

மொட்டையாக வெட்டியிருந்த தலையில் கறுப்பும் பளுப்புமாக முளைத்திருக்கும் நரைத்த முடிகளைத் தவிர வேறொன்றும் என் கண்களுக்குப் படவில்லை.

"இஞ்சை இஞ்சை.." அவள் என் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள்.

தனது வலதுகைப் பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து தனது முன்னங்கைகளில் எதையோ பிடிக்க முயன்றாள்.

எனக்கு எதுவும் புலப்படவில்லை!

"அறுபது தாண்டிய பூஞ்சைக் கண்ணுக்கு என்ன தெரியப் போகுது" என நக்கல் அடிக்காதீர்கள்.

அண்மையிலும் கண் மருத்துவரைப் பார்திருந்தேன். தடித்த கண்ணாடிதான். ஆயினும் 'கற்றரக்ட் இன்னமும் இல்லை. பார்வை நன்றாக இருக்கிறது' என்று சேர்டிபிகற் கொடுத்துள்ளார்.

இப்படியாக உடலில் பூச்சி ஊர்வதாக சொல்லிக் கொண்டு வருபவர்கள் பலரை எனது கிளினிக்கில் பாரத்திருக்கிறேன். பொதுவாக அவர்கள் அனைவரும் வயதானவர்கள். வயதினால் மூளை நரம்புகள் பாதிப்புற்று ஒரு கலங்கலான மனநிலையில் இருப்பவர்கள். மாயத்தோற்றங்கள் (Delusions) ஏற்படுவது அவர்களில் ஏற்படுவது அதிசயமானது அல்ல. புழுக்கள் நெளிவதாகவும், பூச்சிகள் ஊர்வதாகவும், சிலந்திகள் அசைவதாகவும், அட்டைகள் தவழ்வதாகவும், பக்றீரியாக்கள் குடைவதாகவும் அவர்கள் சொல்வதுண்டு.


ஆனால் இது வயதானவர்களின் நோய் மட்டுமல்ல. ஏனைய வயதினரிடையேயும் தோன்றலாம். தமது உடல் நலத்தைப்பற்றிய தப்பான எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள்.

மனப் பிறழ்வு நோயுள்ளவர்கள் போல இவர்களுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பான மாயத் தோற்றங்கள் எழுவதில்லை. பூச்சி, புளு, வண்டு போன்ற ஏதாவது ஒன்று பற்றிய மாயத் தோற்றமே (Monosymptomatic hypochondrial psychosis) இவர்களுக்கு உண்டாகிறது.

இந்த ஒரு விடயத்தைத் தவிர அவர்கள் சாதாரணமானவர்கள் போலவே இருப்பார்கள். வேறெந்த மன நோய்கள் இருப்பதில்லை. இதனை மருத்துவத்தில் delusions of Parasitosis என அழைப்பார்கள்.

இது பற்றி மேலும் படிக்க   Delusions of parasitosis

இவர்களுள் ஒருத்தி ஒரு சிறிய போத்தலில் தன் மீது ஊரும் பூச்சியைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். தோல் நிறத்தில் ஒரு சிறிய வஸ்து இருந்தது. அது என்னவென்று புரியாததால் நுணுக்குக் காட்டியில் வைத்துப் பரிசோதித்தபோது அது ஒரு சருமத் துகள் என்பது தெரியவந்தது.

சிலர் இவ்வாறு பூச்சிகளைப் பிடிப்பதாகச் சொல்லி சருமத்ததைக் கிள்ளி கிள்ளி புண்ணாக்கிக் கொண்டு வருவதும் உண்டு.

பல மருத்துவர்களிடம் ஒருவர் மாறி மற்றவர் என சென்று கொண்டிருப்பது இவர்கள் வழக்கம். திருப்பதியின்மையே காரணம்.  மருத்துவர்களால் அவர்களது எண்ணத்தை மாற்றுவது சிரமமாக இருப்பதால் அவர்களது பிரச்சனை தீருவதே இல்லை. இதனால் மருத்துவர்களைக் குறை கூறுவதும் புதிய மருத்துவரை நாடுவதுமாக அலைந்து கொண்டிருப்பார்கள்.



இவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பவர்களுக்கு இவர்களோடு அலைவதும் இவர்கள் பிரச்சனையை தினமும் கேட்டுக் கொண்டிருப்பதும் சலிப்பையும் சினத்தையும் ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

மருந்துகள் கிடையாதா எனக் கேட்கிறீர்களா? சில psychotic drugs இருக்கவே செய்கின்றன.

வீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் நான் எழுதிய அனுபவக் கட்டுரை.

0.0.0.0.0.0.0

Post Comment

Wednesday, February 22, 2012

சுடாத துப்பாக்கி


என் நாடித்துடிப்பு 72ல் இருந்து 100ற்கு திடீரென எகிறிப் பாய்ந்தது.

அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்துவிட்டது. உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை தற்பாதுகாப்புக்காக என்னையறியாமலே சற்றுப் பின்னுக்கு தள்ளிவிட்டதை உணர்ந்ததும் சற்று வெட்கமாக இருந்தது.


வெட்கப்பட்டு காலத்தைக் கடத்தக் கூடிய தருணம் அல்ல. தற்பாதுகாப்பைத் தேடி வேண்டிய நேரம்.

அவசர கணம்.

சொன்னவர் ஒல்லிக் குச்சி மனிதன் அல்ல. ஆஜானுபவானான மனிதர். மல்யுத்த வீரன் போல பரந்த மார்பும், விரிந்து தோள்களுமான நல்ல திடகாத்திரமான உடல். பத்துப்போரை ஒரே நேரத்தில் அடித்து விழுத்திவிடுவார் போலிருந்தது.

நமது தனுஸ் பத்துப்பேரை அல்ல நூறு பேரை தனியாளாக அவ்வாறு அடித்து விழுத்தியதைப் பார்த்ததில்லையா என எனது அறியாமையை கிண்டல் பண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு கேள்வி கேட்பது அவரை அசௌகர்யப்படுத்திவிடும்.

உற்றுப் பார்த்தபோது வெறும் கையுடன்தான் வந்திருந்தார். தப்பித்தேன். கையில் ஆபத்தானவை எவையும் இல்லை. பொக்கற்றுக்குள்ளும் இருப்பதாகத் தெரியவில்லை. படபடப்பு அடங்கி நிம்மதி பரவியது.


திரும்ப யோசித்தபோது அவமானமாக இருந்தது. Gun என்றவுடன் நான் ஏன் இப்படி பயங்கொள்ளியாகி ஒடுங்கிபோகிறேன்?

வாழ்ந்த சூழல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

துப்பாக்கி தூக்கி எதிரிகளை அழிக்கும் ஆவேசக்காரர்கள் மத்தியில் எனது வாழ்நாளில் சுமார் அரைவாசிக் காலத்தை கழிக்க நேர்ந்திருக்கிறது. அவை களிக்க வைக்கும் நேரங்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காகப் போராடுபவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள். கனவிலும் நினைவிலும் அவ்விரு தரப்பினருமே கொல்லும் வெறியோடுதான் திரிந்தார்கள். எதிரிகளைக் கொல்லும் வெறி. குத்திக் குதறிக் கொல்லும் வெறி.

இடையில் அகப்பட்டால் நாம் அம்போதான்.

ஒரு எதிரியைக் கொல்வதற்காக எத்தனை பொதுமகன் செத்தாலும் பரவாயில்லை என எண்ணும் அதீத கொள்கைப் பிடிப்பாளர்கள். அதுதான் யுத்த தர்மம் என வாதாடுவார்கள்.

இது விதண்டாவதம் என்று சொன்னவன் துரோகியென பட்டை குத்தப்படுவான். துரோகிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.


இதனால் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல அன்றும் இன்றும் சரி எவருக்கும் விருப்பம் இல்லை. எனக்கும்தான்.

ஆனால் இது எனக்கு மட்டும் நேர்ந்த அவலம் அல்ல. தமிழனத்தின் அவலம். இன்னும் சற்றுப் பரந்த சிந்தனையோடு யோசித்தால் இலங்கைத் தீவின் அனைத்து மக்களினதும் அவலம். இனத்திற்கு இனம் அளவுகளில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால் பாதிப்பும் துப்பாக்கி ஏந்தியவர்கள் பற்றிய பயமும் அனைத்து மக்களிடமும் இருந்ததை மறுக்க முடியாது.

இவர் சொன்ன Gun வேறு விடயம்.

இது வேறு விடயம் என்பது ஆரம்பப் பயம் தணிந்ததும்தான் தெளிவாகியது.

உயிரைப் பறிக்கும்; துப்பாக்கியல்ல. உயிர் கொடுக்கும் துப்பாக்கி இவரது.

அவ்வாறு யோசித்தால் பார்த்தால் நானும் துப்பாக்கிக்காரன்தான். அவருடையதை விட என்னுடையது இன்னமும் நல்ல நிலையிலேயே இருக்கிறது எனப் பெரிமிதம் கொள்ளலாம்.

இருந்தபோதும் அவரது பிரச்சனையைப் புரிந்து கொள்ள மேலும் சில விடயங்களைப் பற்றி விசாரிக்க வேண்டியிருந்தது.

 "நீரிழிவு நோய் உங்களுக்கு இருக்கா" எனக் கேட்டேன்.

"இல்லை' என்றார் திடமாக.

சற்று யோசித்த பின்னர் 'கொஞ்சமாக இருக்கு ஆனால் மருந்து சாப்பிடுவதில்லை' என்றார்.

சாப்பிடாமல் எடுத்தால் இரத்தத்தில் சீனியின் அளவு 120, 140 என்று தானிருக்குமாம்.

நீரிழிவு இல்லாதவர்களுக்கு இது 110ற்குள் இருக்க வேண்டும்.

சாதரண அளவை விட 10 முதல் 30 மட்டுமே கூட இருப்பதால்
"இது கடுமையான நோய் அல்ல. குறைவாகத்தானே இருக்கு. சாப்பாட்டால் கட்டுப்படுத்தி விடலாம்" 
என எண்ணி அக்கறை எடுக்காமல் விட்டுவிட்டார்.

நீரிழிவு என்பது அறிகுறிகளற்ற நோய். ஆரம்ப நிலைகளில் எந்தவித இடைஞ்சல்களையும் நோயாளிக்குக் கொடுக்க மாட்டாது. ஆனால் உள்ளிருந்து அரித்துக் கொண்டிருக்கும். அறுந்து விழும் நிலையில்தான் நோயாளிக்குக் தெரிய வரும்.


சிறுநீரகப் பாதிப்பு, அது செயலிழத்தல், மாரடைப்பு போன்ற இருதய நோய்கள், பக்கவாதம், கண்பார்வை மங்கல், மாறாத புண்கள், கால்களை அகற்ற நேருதல் எனப் பல. நீரிழிவினால் நுண்ணிய குருதிக் குழாய்கள் பாதிப்புற்று, உறுப்புகளுக்கு போதிய இரத்தம் பாய முடியாத நிலையில் இவை யாவும் தோன்றுகிறன.

இப்படியான பல பிரச்சனைகள் வந்த பின்னர்தான் பலருக்கு தமக்குள்ள நீரழிவின் பாரதூர நிலை தெளிவாகிறது.

அதற்குப் பின் மார்புக் கவசம் அற்ற வில்வீரன் போலத்தான் இவர்கள் நிலை. ஏற்கனவே வீசிய பாசக்கயிற்றை யமன் எந்ந நேரத்திலும் இறுக்க முடியும்.


இவருக்கும் அவ்வாறுதான். ஏற்கனவே உறுப்பின் இரத்த ஓட்டமும் அதற்கான நரம்புகளும் பாதிக்கப்பட்டுவிட்டன.

இதனால் மனத்தில் எவ்வளவுதான் ஆசை இருந்தபோதும் இவரால் முடியவிதில்லை. பேரழகி ஹெலன் இவர் முன் அம்மணமாக வந்து நின்றால் ஆசை மீறும். ஆனால் காற்றில்லாத பலூன் போல உறுப்பு சோர்ந்து கிடக்கும்.


“My Gun is not firing”  என்று சொன்னது அதனால்தான்.

இவர் கற்றுக் கொள்ளாத பாடம் இவருக்கு உலை வைத்துவிட்டது..

Either you have diabetis or no diabetis. There is nothing in between called mild diabetis.  

வீரகேசரியில் நான் எழுதிய அனுபவப் பகிர்வு
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0


Post Comment

Wednesday, January 11, 2012

வெளிநாட்டு மாப்பிளையின் ஊர்ப் பொம்புளை


 “இவ ஒன்றும் சாப்பிடறா இல்லை.” கடுப்பாகச் சொன்னான்.

Raja Ravi Varma's Painting of  a North Indian Village Girl


அவளில் அக்கறையும் கனிவும் காட்டுவதைவிட குற்றம் சாட்டும் தொனி ஓங்கியிருப்பதாகத் தெரிந்தது.

ஷோ கேசில் உள்ள பொம்மைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தாள்;.


உடைகளையும், நகைகளையும் பளிச்சென அணிந்திருந்ததைப் பார்த்தபோது புதுமணத் தம்பதிகளாகத் தோற்றினர்.

“எதைக் கண்டாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டே இருக்கிறா. ஷி இஸ் நொட் ஈடிங் அட் ஓல். ஒண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறா இல்லை.” அவனது ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்புத் தொனி லண்டன்வாசி என்பதைக் கோடி காட்டியது.

“…வயிறும் ஊதலாகக் கிடக்காம்.”

இளம் பெண், சாப்பாட்டில் மனமில்லை. ஓங்காளம் எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் பார்த்த காட்சிதானே உங்களுக்கு நினைவுக்கு வருகிறது? மசக்கையால் சங்கடப்படுகிறாள்.  கர்ப்பம் தங்கியிருக்க வேண்டும்.

“கடைசியாக எப்ப பீரியட் வந்தது” முடிவிற்கு வந்த தைரியத்தில் வாயைத் திறந்தேன்.

“நாங்கள் மரி பண்ணி ஜஸ்ட் வன் வீக்தான்” என்றான் அவன்.

திறந்த எனது வாய் மூடியதை நான் உணர நீண்ட நேரமாயிற்று!

ஒரு வாரத்திற்குள் கர்ப்பம் தங்கவைக்கக் கூடிய ஆண்மையுள்ளவன் இனித்தான் பிறந்து வர வேண்டும்.

மனித குலத்தில் அத்தகைய கூர்ப்பு நடந்திருப்பதான செய்தியை மருத்துவ உலகம் அறிந்திருக்கவில்லை. அவளது ஓங்காளத்திற்கும் பசியின்மைக்கும் காரணம் வேறு ஏதோவாகத்தான் இருக்க முடியும்.

சட்டெனப் பெண்குரல் எனது சிந்தனையில்; குறுக்கீடு செய்தது.

“ஒண்டும் விருப்பமில்லையாம். வயிறும் ஊதிக்கிடக்கு. சோம்பிச் சோம்பிக் கிடக்கிறா. என்னெண்டு புரியுதில்லை” அம்மா சலிப்புடன் சொன்னா.

அவளின் சிறு வருத்தத்தையும் சகிக்க முடியாத இவள் சொந்த அம்மாவாக இருக்க முடியாது. மாமியாராகத்தான் இருக்க வேண்டும்.

“சாப்பாட்டைக் கண்டால் இப்படியும் ஒருத்திக்கு ஓங்காளம் வருமே… எனக்கெண்டால் ஒண்டுமா விளங்குதில்லை…” அவள் இழுத்து இழுத்து பேசியது நல்லதுக்கல்ல என மனம் குருவி சாத்திரம் கூறியது.

வெறும் குற்றம் சாட்டும் தொனி அல்ல. உள்ளார்ந்த வியப்பும் அல்ல!
சந்தேகிக்கும் பார்வை!


புதிதாக வந்த மருமகளை சற்றும் நம்பாமை தொனித்தது.
திரும்பிப் பார்த்தபோது மருமகளின் முகம் ஆற்றாமையால் சட்டெனக் கறுத்தது. எனது மனதில் ஆழமாக இரத்தம் சீறக் கீறியது போலிருந்தது.

‘அடப்பாவி கலியாணம் கட்டி ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் மருமகள் மீது இத்தகைய ஏடாகூடமான சந்தேகமா?’ ஆத்திரமாக வந்தது.

இனியும் முடியாது அவளிடம் பேசித்தானே ஆக வேண்டும்.

மாமியாரிடம் அல்ல!

இவ்வளவு நேரமும் பேசா மடந்தையாக இருந்த நோயாளியிடம். 

“பீரியட் எப்படி?” எனப் பொதுவாகக் கேட்டேன்.

பீரியட் எப்ப வந்தது? என்று கேட்கவில்லை.

மாமியாரின் சொற்களால் மனம் கறுத்த சூழ்நிலையில்; நானும் அவளை எனது வார்த்தைகளில் நோகவைக்க விரும்பவில்லை. எனவே பொதுவாகக் கேட்பது போல எனது வினாவை எழுப்பினேன்.

“முந்தித் தொடங்கி ஒழுங்கில்லை. இப்ப 4-5 மாசமா ஒழுங்காக வருகுது. திகதிக்கு ஒண்டு ரண்டு நாள் முந்திப் பிந்தி வரும்…”

“…..கலியாணத்துக்கு ஒரு கிழமை முந்தித்தான் கடைசியாக வந்தது.”
தான் முறைதவறி நடந்தவள் அல்ல, தனக்கு கர்ப்பம் தங்கியிருக்கவில்லை, என்பதை அவளது மறுமொழி நாசூக்காக சுட்டிக்காட்டியது.

மாமியாரின் குத்தல் பேச்சுக்கு ஆவேசப்பட்டு வார்த்தைகளை அள்ளிப் பேசவில்லை. நிதானமாக இருந்திருக்கிறாள். அப்படியானவள் நிச்சயம் மற்றவர்களை அனுசரித்துப் போவளாகவே இருப்பாள். அவளது கெட்டித்தனத்தை மனதுக்குள் மெச்சிக் கொண்டேன்.

மருமகளின் விடையைக் கேட்டதும் அம்மாவினது முகம் ஏமாற்றத்தில் பட்டெனத் தொய்ந்தது.

“இவவுக்கு கனகாலமாக இந்தப் பிரச்சனை இருக்காம். சாப்பிட்டால் ஏவ் ஏவ் .. என காஸ் காஸ்சாகப் போகுமாம்.” இது கணவன். பிரச்சனையை வேறு திசைக்குத் திருப்ப முயன்றான்.

‘இவள் பிரச்சனைக்காரி, சரியில்லாதவள்’ என்ற முன் தீர்மானம் இருந்தால் பிழை கண்டுபிடிப்பது பெரிய காரியமா?

நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.

“நாங்கள் வழக்கமா புட்டு இடியப்பம் எண்டு வீட்டுச் சாப்பாடுதான். வெளிச் சாப்பாடு சாப்பிட்டால்தான் ஒத்துக் கொள்ளுறதில்லை”

‘இங்கு வீட்டுச் சாப்பாடுதான். சிலவேளை மட்டும் கடையிலை வாங்குவதாக’ அவன் இடைமறித்தான். நான் அதைச் அசட்டை பண்ணிவிட்டு அவளிடம், “இஞ்சை உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கிறதில்லை” என விசாரித்தேன்.

இந்தச் சாப்பாடுகள் பிடிக்காதாது இவளுக்கு

“காலையிலை பாண். அது எனக்குப் பிடிக்கிறதேயில்லை. கொத்து, சில்லி பரோட்டா எண்டு வேறை எண்ணெய் சாப்பாடுகளாக வாங்குவினம். இதுகள் ஒண்டும் எனக்கு ஒத்துவாறதில்லை.”

திடீரென அக் கல்லாணம் முற்றாயிற்று. குடும்பக் கஸ்டத்திற்கு தீர்வாக. வெளிநாட்டு மாப்பிள்ளை. சீதனம் பெரிசாக இல்லை. கலியாணமாகிய கையோடு ஊரிலிருந்து கொழும்பு வந்து மாமியார் வீட்டில் தங்கியிருக்கிறாள்.

புது இடம், புதுச் சூழல், புதிய மனிதர்கள். கடல் மீனைக் கரையில் போட்ட மீனாகத் தவித்தாள். ஊரிலை சுதந்திரமாகத் திரிந்தவளுக்கு கால்கட்டு. அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. வழமையான சாப்பாடும் இல்லை. ஆதரவு தருகிற அம்மா இல்லை. மனம் தொய்ந்துவிட்டது.

ஊரில், ஐஞ்சு பரப்பு வீட்டில் ஏப்பம் விடுவதும் கதை பேச்சு சண்டை அழுகை எல்லாமே உச்ச ஸ்தாயியில்தான் இருக்கும். அக்கம் பக்கம் கேட்காது. இது தொடர் மாடி வீடு. ஏப்பம் விட்டாலும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கேட்கும். இளப்பமாகப் பார்ப்பார்கள் என்பதை அவள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.

புதிய சூழலுக்கு இன்னமும் இசைவாகவில்லை. அவளது உள நிலையைப் புரிந்து கொள்ளும் மனப்பான்மை கணவன் வீட்டுக்காரருக்கு இல்லை. தங்கள் ஆட்டத்திற்கு மறுபேச்சுப் பேசாத, அடக்க ஒடுக்கமான, பவ்வியமான ஊர்ப் பொம்பிளை வேண்டும், என நினைப்பவர்கள் அவர்கள்.


பெண்டாட்டி என்பவள் வாய் பேசாத மடைந்தையாகவும் இருக்க வேண்டும் லண்டன் நாகரீகத்திற்கு ஏற்ற பவிசுள்ளவளாகவும் இருக்க வேண்டும். முடிந்த காரியமா?
-.-.-.-.-.-

“தீஸ் பூட்ஸ் ஆர் நொட் எகிறியிங் வித் மீ. வொண்டர் கௌ தீஸ் பீப்பிள் ஆர் ஈடிங் ஆல் திஸ் ஸ்டவ் டெயிலி”

பேர்பியூமின் வாசனை அந்தக் கட்டடத்தையே நிறைய வைத்தது. மேலைநாட்டு அதி நாகரீக உடையில் வந்த பெண் சொன்னாள். சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லையாம். லூஸ் மோசன் (Loose motion) போகிறதாம்.

விபரங்களைப் பதிவதற்காக கம்பியுட்டரைத் தட்டிய போது அவளது பெயர் ஏற்கனவே பதிவாகியிருப்பது தெரிந்தது. எதற்காக வந்திருந்தாள் என பழைய பதிவுகளைப் பார்த்த போது புரிந்தது.

அதே அந்தக் கிராமத்துப் பொம்பிளை!

எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரியின்  ஞாயிறு இதழில் நான் எழுதிய அனுபவக் குறிப்பு
0.0.0.0.0.0.0


Post Comment

Friday, November 18, 2011

இரவிரவாகப் படித்தும் சோதனையில் கோட்டை



"இவன் ராவா ராவா தூங்கிறான். சோதினை கிட்டியிட்டுது. இப்படித் தூங்கினால் எப்படிப் பாஸ் பண்ணப் போறானோ தெரியவில்லை" சலித்துக் கொண்டார்.

சொன்ன தாயாரின் முகத்தை விட்டுவிலகி அவனைப் பார்த்தேன்.

அவன் கண்களில் தூக்கக் கள்ளன் ஒளிய முனைந்தும் மறைய முடியாது என்னிடம் வசமாக மாட்டுப்பட்டான்.

"இப்படிப் படித்தால் பாஸ் பண்ணுவது கஸ்டம்தான்"


கேட்டதும் அம்மாவின் முகம் டியூப் லைட்டாகப் பிரகாசித்தது.

ஏற்கனவே சோர்ந்து கிடந்த அவனது கண்கள் எனது பதிலைக் கேட்டதும் மேலும் அசதியுற்றுத் தாழ்ந்தன. இவ்வளவு படித்தும் டொக்டர் தன்னை அவநம்பிக்கைப்படுத்துவதாக எண்ணுகிறான் என்பது புரிந்தது.


"நித்திரை முழித்துப் படித்தால், படித்தது மூளையில் பதியாது, மறந்து விடும். போதுமான நித்திரை கொண்டால்தால் படித்தவை மூளையில் ஒழங்காகப் பதிவாகி ஞாபகத்தில் நின்று பரீட்சை நேரத்தில் கைகொடுக்கும். இல்லையேல் கேள்விப் பேப்பரைப் பார்த்ததும் அலங்கமலங்க விழிக்க வேண்டிய நிலைதான் வரும்."

இலைமறை காயாகச் சொன்னது புரிந்ததும், மகன் முகம் மலர, அம்மா முகம் அழுகிய மாம்பழமாகச் சூம்பிப் போனது.

அவன் தூங்குவது போதாது என்பது தீர விசாரித்தபோது தெரியவந்ததால்தான் அவ்வாறு சொன்னேன். இரவு 11.30 அல்லது 12 மணி மட்டும் விழித்திருப்பானாம்.

பாடம் படிக்கிறானே இல்லை, பாடப் புத்தகத்துள்  கதைப் புத்தகத்தை மறைத்து வைத்து படிக்கிறானா என்பது தெரியாது பல அம்மாக்கள் காவல் பூனையாக காத்திருந்தும் ஏமாறுவது தெரிந்ததுதானே.

காலையில் 5 மணிக்கு அலாரமாக அம்மாவின் அதட்டல் இவனை விழித்து எழ வைக்கும். பகலில் பள்ளிக் கூடம், ரியூசன் என ஓடித்திரியவே நேரம்போதாது. குட்டித் தூக்கம் போடவும் முடிவதில்லை.

ஓட்டப் போட்டி நடக்கிறது பிள்ளைகளுக்கு பரீட்சையில். தங்கள் பிள்ளைகள் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் பிள்ளைகளை படி படி என நிர்பந்தம் கொடுக்கிறார்கள். நல்ல சாப்பாடு கொடுத்தால் உசாராகப் படிப்பான் என்ற நம்பிக்கையால் அதில் குறை வைக்கமாட்டார்கள்.

ஆனால் அவர்களது உள உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதிய தூக்கம் மிகவும் அவசியம் என்பதை மறந்து விடுகிறார்கள்.

பொதுவான ஆரோக்கியத்தைப் பேண மட்டுமின்றி கற்றல் செயற்பாட்டிற்கும் தூக்கம் தேவை என்பது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.


மிச்சிகம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மருத்துவர்களின் அண்மைய ஆய்வு இதனை உறுதிப்படுத்துகிறது. 250 பேரைக் கொண்ட ஆய்வின் முடிவு இது.

தூக்கத்தின் போதுதான் ஒருவரது மூளையானது தனக்குக் கிடைத்த தகவல்களை அவர் அறியாமலே பாகுபடுத்தி சேமித்து வைக்கிறது. இந்த ஆற்றல்தான் விழித்திருக்கும்போது அவற்றை ஞாபகப்படுத்துவதற்கு உதவுகிறது.

போதிய நித்திரை கொண்ட பலருக்கு
  • ஞாபக சக்தி அதிகரித்திருந்தது. 
  • சிலருக்கு மாற்றம் ஏற்படவில்லை என்ற போதும் 
  • பெரும்பாலானவர்களுக்கு சற்றேனும் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது அந்த ஆய்வின்போது தெரியவந்தது.
பொதுவாக எவருக்கும் 6 முதல் 7 மணிநேர நித்திரை அவசியம் எனக் கருதப்படுகிறது. அவனது வயதிற்கு தினமும் 6.30 மணிநேரமாவது தூங்கினால்தான் ஆரோக்கியம் கெடாது. அதுவே அவனது கல்வி முன்னேற்றத்திற்கான பாதையாகும்.

கற்றல் செயற்பாடு என்பது பாடங்களைப் படித்தல் மட்டுமல்ல. கற்றல் தூக்கத்திலும் நடக்கிறது. இதனைப் புரிந்து செயற்படுத்தினால் மட்டுமே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விப் பெறுபேறுகளில் முன்னேற்றத்தைக் காண முடியும்.


இரவிரவாகப் படித்தும் சோதனையில் கோட்டை விடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

பிள்ளைகளின் பரீட்சை முடிவுகள் வந்த பின்னர்தான் பிள்ளைகளது தூங்கும் நேரம் போதாது என்பதை பெற்றோர்கள் பாடமாகக் கற்க நேர்ந்தால்; அவமாகிவிடும்.

காலம் பொன்னானது.

                                வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.

Post Comment

Friday, October 28, 2011

காணாமல் போன வேட்பாளர்


"இந்தப் பிள்ளைக்கு சரியான வயிற்று வலி" சிங்களத்தில் சொன்னார்.

நான்கே வயதான குட்டிப் பையனை இரு கைகளாலும் கிடையாகத் தூக்கி கொண்டு வந்தார். ஓட்டமா நடையா என்று சொல்ல முடியாத வேகத்தில் அந்தரப்பட்டு கொண்டு வந்திருந்தார்.


குழந்தை படுக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வேதனையில் முனங்கியபடி திணறிக் கொண்டிருந்தது.

"ஒண்டுமே சாப்பிடுதும் இல்லை. குடிக்கிதும் இல்லை." என்றாள் தொடர்ந்து வந்த பெண்.

பின்னால் ஒரு பெரிய கூட்டம்.

எனது கொன்சல்டேசன் அறைக்கு அப்பால், நடைபாதை, வரவேற்பறை எல்லாம் நிறைந்ததால், வாசலில் தெருவோரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

தேசத்தின் தென்கோடியிலிருந்து சுற்றுலா வந்திருந்தார்கள். பஸ் நிறையச் சனம். நேற்று இரவு புறப்பட்ட பயணம். இரவிரவாகப் பயணித்து கொழும்பு வந்திருந்தார்கள்.

அதனால்தான் பட்டியிலிருந்து திறந்துவிட்ட மாடுகள் போல, சாலை விதிகளை மதிக்காது சிதறிக் கிடந்தார்கள்.

மிருகக் காட்சிசாலை, நூதனசாலை எனக் காலையில் சுற்றியடிக்கும்போது குழந்தைக்கு வலி தொடங்கிவிட்டது. என்னிடம் வரும்போது மதியம் தாண்டிவிட்டது. குழந்தை வலியால் மயங்காத குறை.

"படுக்கையில் கிடந்துங்கோ. சோதித்துப் பாப்பம்"

தகப்பன் கிடத்த முயன்றபோது சிவபெருமான் கழுத்தில் பாம்பாக குழந்தை கைகளால் சுற்றிக் கொண்டது.


தூக்குக் கயிறாகி தகப்பனை கைலாசத்திற்கு அனுப்பிவிடும் என்ற பயத்தில் பரிசோதிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

"குழந்தை என்ன சாப்பிட்டது"

"காலையிலை பணிஸ் சாப்பிட்டு பாலும் குடிச்சது. பிறகு சோடாவும் குடிச்சது. இப்ப இரண்டு மணித்தியாலமாகத்தான் இந்தக் குத்து."

வந்த இடத்திலை கண்ட சாப்பாட்டையும் பிள்ளைக்குச் சாப்பிடக் கொடுத்திருக்குங்கள். செமியாமல் இருக்கும். அல்லது உணவு நஞ்சானதால் ஏற்பட்டிருக்கும்.

"சத்தியும் இருக்கோ?" எனக் கேட்டேன்.

"இல்லை" எனப் பதில் வந்தது.

காய்ச்சல் இருக்கோ எனத் தொட்டுப்பார்க்க முயன்றேன்.

தொற்றாட் சுருங்கிபோல என்னைக் கண்டதும் சோர்ந்தது குழந்தை.

எனது கையில் தனக்கெதிரான ஆயுதங்கள் எதுவும் இல்லை என அறிந்ததும் நிம்மதியடைந்தது. ஊசி, காய்ச்சல் கம்பி, ஸ்டெதஸ்கோப் எதுவும் என் கையில் இருக்கவில்லை!!.


தொட்டபோது உடல் வியர்திருந்ததே ஒழிய காய்ச்சல், குளிர் எதுவும் இல்லை.

கடுமையான வலியாக இருப்பதாலும், குழந்தை படுக்க முடியாமல் குறண்டியபடி தகப்பன் கைகளில் சுருண்டு கிடப்பதால் குடல் கொழுவல், அப்பன்டிசைடிஸ், பெரிடனைடிஸ் என ஏதாவது ஏடாகூடமான நோயாக இருக்கலாம்.

தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்து.

நோயைப் பற்றி அல்ல! எவ்வாறு குழந்தையை படுக்கையில் விட்டுப் பரிசோதிப்பது என்பதையிட்டு.

அப்பொழுது சுவீப் எனக்கு விழுந்தது.

பிள்ளையைதை் தொடாமலே நோயை ஊகிக்க முடிவதைவிட வேறென்ன சுவீப் எனக்குக் கிடைக்க முடியும்?

குழந்தை சற்று அமைதியாகி தனது தகப்பனின் கைகளில் சற்று உடலை நிமிர்த்திப் படுத்தது. குறண்டிக் கிடந்த உடல் நிமிர அதன் வயிற்று பகுதி தெளிவாகத் தெரிந்தது.

"பிள்ளையை பாத்ரூமிற்கு கொண்டு போய் காலை நன்கு குளிரக் கழுவிட்டு மூத்திரம் கழிக்க விடுங்கோ"

ஆச்சரியம் தகப்பன் முகத்தில் படர்ந்தது.

குழந்தை பரிசோதிக்காமல், வேதனையைத் தணிக்க மருந்தும் தராமல் பாத்ரூமிற்குக் கலைக்கிறாரே என்றதில் சிறிது கோபமும் ஏற்பட்டிருக்கலாம்.

 மறுக்க முடியாமல், வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார்.

திரும்பி வந்தபோது குழந்தையின் முகத்தில் வேதனையின் சுவட்டையே காண முடியவில்லை. கட்டிலில் கிடத்தியபோது மறுப்பின்றி நீட்டி நிமிர்ந்து படுத்து, ஆயாசம் அடங்க கண்ணை மூடியது.

வயிற்றைப் பார்த்தேன்.

அடிவயிற்றில் முட்டிபோல வீங்கியிருந்ததை இப்பொழுது காணவில்லை.

வேறொன்றும் இல்லை. இரவிரவாகப் பயணம், பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பொழுதுபோக்கு. முதல் நாள் இரவிலிருந்து சிறுநீர் கழியாததால், அடைத்து வயிறு வீங்கி வலி எடுத்திருந்தது.

காலைக் கழுவி உடலைச் குளிர வைத்ததும் அடைத்த பைப் திறந்துவிட்டது.

திறந்து மூத்திரம் வெளியேற்றியதும் வலி குணமாகிவிட்டது.

அடுத்த முறை இரவு பஸ்சில் யாழ்ப்பாணம் போகும்போது எனக்கு வயிற்றுக் குத்து வந்தால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.


பாவி பஸ்காரர்!

வெள்ளவத்தையில் வெளிக்கிட்டு 'நொன் ஸ்டொப் டிரைவிங்' செய்தால் வயது போன ஆம்பிளையள், அதுவும் புரஸ்ரேட் வீக்கக்காரர் பாடு அதோகதிதான்.


கணவன் கழிப்பதற்கு மனிசிமாரால் தூக்கிக் கொண்டு போக முடியுமா? 

எலக்சன் காலத்திலை அரசாங்கக் கட்சி வேட்பாளருக்குத் தெரிந்திருந்தால், வீதி எங்கும் பாத்ரூம் கட்டுவதாக வாக்களித்திருப்பார்கள்.

பிறகென்ன?

தோற்றவுடன் காணாமல் போயிருப்பார்.

ஞாயிறு வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, June 19, 2011

நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம்


மனதுக்குள் இருந்தது போஸ்டர் அடித்தது போல அவளது முகத்தில் பளிச்சென ஒட்டிக் கிடந்தது.

'நீ செய்த பிழையான வேலையால் வந்த வினைதான்' என்று சுட்டு விரலை நீட்டி நேரடியாக குற்றம் சொல்லாததுதான் மிச்சம்.


நல்ல புஸ்டியான உடம்பு. வட்டாரி வைத்துக் கீறிய வட்டம் போல முகம் ஊளைச் சதைகளால் நிரம்பிக் கனத்தது. ஆடு மாடுகள் இரை மீட்டு அசை போடுவது போல வாய் எதனையோ சப்பிச் சுவைத்துக் கொண்டேயிருந்தது.

பாரத்தை இறக்கி வைத்துவிட்டு களை தீர ஆயாசப் பெரு மூச்சு விட்டாள்.
இறக்கி வைத்தது பை நிறைந்த பொருட்களை அல்ல. 80 கிலோ ஆன தனது உடலைத்தான்.

'டொக்டர் நீங்கள் தந்த மருந்து எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ரா ராவா சலம் அடிக்குது. நான் மருந்தைக் குறைச்சுப் போட்டன்.'

பார்த்துப் பல நாட்களாகிவிட்டதால் கொடுத்த மருந்துகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை.

வழமையாக உச்ச வேகத்தில் சுற்றும் பானை நிறுத்திய பின்னும் குளிர் கலையாத தினத்தில் இவளது சிறுநீர் அதிகம் போவதற்குக் காரணம் என்ன?

'மருந்துக்காக இருக்காது. குளிராக இருக்குமா? காய்ச்சலாக இருக்கலாம். இந்த பனிக் குளிருக்கு காச்சலும் சேர்ந்தால் சலம் கூடப் போகும்தானே' என்ற சந்தேகம் எழுந்தது. டெம்பரேச்சரைப் பார்த்தேன். டிஜிட்டல் தேர்மாமீற்றர்  'நீ சொல்வது பிழை' என மறுத்து 98.4 நோர்மல் என்றது.

'வேறு என்னவாக இருக்கும்? லசிக்ஸ் (Lasix) மருந்து கொடுத்திருப்பேனோ?'

லசிக்ஸ் என்பது உடலில் தேங்கிவிட்ட மிதமிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்காக் கொடுக்கும் மருந்து. பொதுவாக இருதய வழுவல் ;(Heart Failure)> ஈரல்சிதைவு (Cirrhosis)> சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் சிறுநீர் வெளியேறுவது குறைந்தால் அதைச் சீர்செய்யக் கொடுக்கப்படும் மருந்து.

ஆனால் 40 வயதேயான இவளுக்கு அப்படியான நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை அப்படி இருந்தாலும் அத்தகைய தீவிர பிரச்சனையான நோயுள்ளவர்களை நான் மறப்பதில்லை. இவள் அவர்களுள் ஒருத்தியல்ல.

'சலம் போகைக்கை எரியுதோ' சிறுநீர்த் தொற்றாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்ததில் கேட்டேன்.


 'ஒரு எரிவும் கிடையாது. பைப் திறந்தது போல வீச்சாகப் போகிறது' என்றாள்.


காலையில் வந்த நோயாளி தான் குளிப்பதற்கு பைப்பைத் திறந்ததும், சிறுநீர் சிந்துவதுபோல முக்கி முனகிக்கொண்டு வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் புரஸ்ரேட் நோயாளி. இவர் பெண் என்பதால் புரஸ்ரேட் நோய் அல்ல என்பதும் நிச்சயம்.

சிறுநீர்த் தொற்று இருக்காது எனத் தோன்றினாலும் சிறுநீர்ப் பரிசோதனை அவசியம்.

கணனியைத் தட்டி இவளது பதிவுகளைப் பார்த்தபோது அவளது சல அடிப்பிற்கு நான் கொடுத்த மருந்துகள் எவையும் காரணமல்ல என்பது தெளிவாயிற்று.

 
மருத்துமனையில் கணனியில் குறிப்பு   பற்றிய முன்னைய பதிவு.

இருப்பினும் தெளிவாக அவளுக்கு விளக்குவதற்கு இரத்தப் பரிசோதனையும் அவசியம். மருந்துவமனையிலேயே இருந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரிப்போட் வந்தபோது இரத்தத்திலும் சிறுநீரிலும் சீனியின் அளவு அமோகமாக விளைச்சல் கண்டிருந்தது தெரிய வந்தது.

சீனி விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கையில் இவ்வளவு சீனியை வீணாக்குகிறாளே என கவலைப்படத்தான் முடிந்தது.


கொமோட்டில் கழியும் சீனியை வாயில் அள்ளிப் போடவா முடியும்?

சென்ற முறைதான் நீரிழிவு நோய் என முதன்முறையாக இனங்காணப்பட்டு அதற்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தோம். மருந்து வேலை செய்து நோயைக் குணமாக்கு முன்னரே, மருந்தால்தான் தனக்கு நோய் என்று கருதிய இந்த அதிவிவேக பூரண சிந்தாமணி மருந்து எடுப்பதைக் குறைத்துவிட்டாள்.

உண்மையில் குறைத்தாளா அல்லது மருந்தைப் போடாமலே நிறுத்திவிட்டாளா என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாகப் போகும். நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மாத்திரைகள் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும். அவ்வாறு நீரிழிவு கட்டுப்பட்டதும் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது குறைந்து வழமைபோலப் போகும்.

இது புரியாத இவளும் இவளை ஒத்த வேறுபலரும் தங்கள் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தான் காரணம் என எண்ணுகிறார்கள். நீரிழிவுக்கு மட்டுமல்ல அல்சர், பிரசர், மூட்டுவாதம் என எந்த நோயை எடுத்தாலும் இப்படியாக மருந்தையே குற்றவாளியாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம் என்ன?

பாரம்பரிய மருந்து முறைகளின் ரகசியம் பேணும் 'மூடு மருத்துவம்' போலன்றி இன்றைய நவீன மருத்துத்தில் நோய்கள் பற்றி மட்டுமன்றி மருந்துகளைப் பற்றியும் அவற்றால் ஏற்படக்;கூடிய பக்கவிளைவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசப்படுகின்றன. பல நோயாளிகளும் இணையம் முதல் தொலைக்காட்சி வரை கேட்டும் படித்தும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு. எதிலும் மறைமுகத்தை மட்டும் பார்ப்பவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் மருந்தே வேண்டாம் என்கிறார்கள். காலனுக்கு விரைவில் விருந்து வைக்க முனைகிறார்கள்.

உண்மையில் நோயாளிகளை விட மருத்துவர்களே பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மருந்தைக் கொடுக்கும்போதும் அதன் சாதக பாதக விளைவுகளைக் கருத்தில் கொண்டே கொடுப்பார்கள்.

அப் பெண்ணிற்கு 'சல அடிப்பிற்கான' காரணத்தை விளக்கினேன்.

சிறுநீர் கழிப்பது பற்றிய மற்றொரு பதிவு... லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல ...

அவளது முகத்தில் இருந்த போஸ்டர் திடீரென மாறிவிட்டது!



எலக்சன் நேரத்திலை சரத் பொன்சேகா, மற்றும் மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர்கள் சுவர் முழுக்க ஒன்று கிழிய மற்றது வருமே அதுபோல.

ஆனாலும் குற்றம் சாட்டும் சுட்டு விரலை தன்னை நோக்கித் திருப்பவில்லை.

அரசியல்வாதிகளுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல!

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.

Post Comment

Wednesday, May 18, 2011

குடிகாரக் கணவனின் முரட்டுக் கோபத்தை அடக்கும் வழி



ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.


இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அதற்குக் கிழே கண் மடலும் மொழுமொழுவென நீர்க்கட்டி போல அதைத்திருந்தது.

இவற்றை எமது மனத்தில் அகற்றிவிட்டுப் பார்த்தால் வழமையான அழகான முகமாக பிரகாசிக்கும் எனத் தோன்றியது.

பார்க்கப் பரிதாபமாக தோற்றமளித்தாள். ரத்தக்களரியாகச் சிவந்திருந்த முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அதையும் மீறிய வன்மம் அவளது கண்களில் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கண்களைக் கீழே இறக்கிப் பார்த்தபோது கழுத்தில் கருமையாகக் கண்டல். கைகளில் அங்காங்கே சிறு கீறல்கள்.

“என்ன நடந்தது?”

உடன் பதில் வரவில்லை. வாய் திறப்பதற்கு முன் எதைச் சொல்வது எப்படிச் சொல்வது எனக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். தானகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

வழமையில் அவள் அப்படியானவள் அல்ல. மிகவும் துடிப்பானவள். கேட்பதற்கு முன் பட்பட்டெனப் பதில் வரும். எதிர்க் கேள்விகளும், சந்தேகங்களும் சரமாரியாகப் பாய்ந்து வந்து என்னைத் திணறடிக்கும்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். காதல் கலியாணம். அவனும் நல்ல வேலையில் இருக்கிறான். பண்பாகப் பழகுபவன். இன்னும் குழந்தைகள் இல்லை. இன்று தனியே வந்திருக்கிறாள்.

மனதில் அவளது சரித்திரப் பக்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

“எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…” ஆரம்பித்தவள் சற்று நிதானித்தாள்.

“இதெல்லாம் இவராலைதான். குடிச்சுப் போட்டு வந்தார் என்றால் என்ன செய்யிறம் என்று அவருக்குப் புரியுதில்லை. அடிச்சு உதைச்சு என்னைச் சம்பலாக்கிப் போடுகிறார்”

எனக்கு ஆச்சரியாக இருந்தது. குடிப்பானா அவன்?

“குடிக்கிறவரே. அடிக்கடி குடிக்கிறவரோ. கூடுதலாகவும் குடிக்கிறவரோ” என விசார்த்தேன்.

“அதிகம் குடிக்கிறதில்லை. எப்பெண்டாலும்தான். பார்ட்டி, பிரண்ட்ஸ் என்று சேர்ந்தால் குடிப்பார்…”

“…ஆனால் குடிச்சிட்டு வந்தால் பிரச்சனைதான். கண் மண் தெரியாது, கோபம் பொத்துக் கொண்டு வரும். தேவையில்லாமல் என்னோடை சண்டை போடுவார்.”


காயங்களுக்கு பண்டேச் பண்ணி, உடல் வலிகள் தீர மருந்துகள் கொடுத்தேன்.

ஆனாலும் அவளது அடிப்படைப் பிரச்சனை தீரவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தீராவிட்டால் மீண்டும் அடிகாயங்களுடன் வந்து நிற்பது நிச்சயம்.
பேச்சை ஆரம்பித்தேன்.

“ அவரது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதா?”

“அடிக்கடி குடிக்கிறவரில்லை…

“..எப்பெண்டாலும்தான் குடிப்பார். அந்த நேரத்திலை அவர் அடியாமலிருக்க ஏதாவது செய்ய முடியுமா டொக்டர்”

சற்று சிக்கலான விடயமாக இருந்தது. மருத்துவ ரீதியில் குடித்துவிட்டு வருபரை உணர்ச்சி வயப்படாமல் தடுக்க முடியமா?

அதனால் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சற்று யோசித்தேன்.

“நீங்கள் ஒரு முயற்சி செய்து பாருங்கள். அவர் குடித்துவிட்டு வரும் நேரங்களில் உங்களது வாயில் கிறீன் ரீயை விட்டு அலசிக் கொண்டே இருங்கள்...

...குடிக்கக் கூடாது,

....வெளியே துப்பவும் கூடாது.

...வாயில் வைத்து அலசிக் கொண்டே இருங்கள்.”


அவளுக்கு ஆச்சரியாக இருந்தது.

கிறீன் ரீயை குடியாமல் அலசிக் கொண்டே இருப்பதா. அதுவும் அடிக்கும் அவரல்ல! அடி வாங்கும் தான்!

அரை நம்பிக்கையோடு சென்றாள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தாள். அடி, காயம் எதுவும் இல்லை. தடிமன் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வந்திருந்தாள்.

“இப்ப அவர் குடித்தால் அடிக்கிறதில்லையோ”

“இல்லை…..” முழுமதியாக முகம் பூரித்தாள்.

“…என்ன அற்புதமான ஐடியா சொன்னீர்கள். அவர் குடிச்சிட்டு வந்தால் நான் நீங்கள் சொன்னபடி வாயில் கிறீன் ரீயை என்ரை வாயில் விட்டு அலசிக் கொண்டே இருப்பேன். அவர் அடிப்பதேயில்லை…
.
…என்ன அதிசயம். எப்படி நடக்குது டொக்டர்? அந்த கிறீன் ரீ மணத்திற்கு கோபம் வராமல் தடுக்கிற குணம் இருக்கிதா?”

நான் மறுமொழி சொல்லவில்லை. உண்மையைச் எப்படி முகத்துக்கு நேரே சொல்வது?

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.


‘நீ வாயை மூடிக்காண்டிருந்தால் அவரது கை நீளாது’ என்பதை அவளுக்குக் கூறவில்லை.

வெறுமனே புன்னகைத்தேன்.

எனது வேறுசில ஆலோசனைகள் பற்றி அறியக் கீழே கிளிக் பண்ணுங்கள்.



டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0


Post Comment